புதுடெல்லி: தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாவிட்டால் உள்ளாட்சி அமைப்புகளுக்கான நிதி இல்லை என மத்திய அரசு அறிவித்துள்ளது.
மக்களவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது திமுக உறுப்பினர் ஆ.ராசா பேசுகையில், "உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தப்படவில்லை என்றால் வெளிப்படைத்தன்மை எப்படி நிலவும்?
"தமிழகத்தில் பல ஆண்டுகளாகவே உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படவில்லை. உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படுவதை உறுதி செய்ய தனிச்சட்டம் இயற்ற வேண்டும். தமிழகத்தில் அறிமுகம் செய்யப்படும் எல்லா அரசு திட்டத்திலும் லஞ்சம், ஊழல், வசூல் கலந்துள்ளது," என குற்றம்சாட்டிப் பேசினார்.
ஆ.ராசாவின் கேள்விக்குப் பதில் அளித்த மத்திய ஊரக வளர்ச்சி அமைச்சர் நரேந்திரசிங் தோமர், "உள்ளாட்சி அமைப்புகளுக்கு நிதி ஒதுக்கும் விவகாரம் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது.
"தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலை நடத்தாவிட்டால் உள்ளாட்சி
அமைப்புகளுக்கான நிதியை விடுவிக்கமாட்டோம்," என திட்டவட்டமாகக் கூறினார்.
முன்னதாக நேற்று தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்த அக்டோபர் 31 வரை அவகாசம் கேட்டு உச்ச நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் மனு தாக்கல் செய்துள்ளது. வறட்சி மற்றும் குடிநீர் தட்டுப்பாடு காரணமாக உள்ளாட்சி தேர்தல் வார்டு வரையறை பணிகள் தாமதமாவதாகவும் தேர்தல் ஆணையம் குறிப்பிட்டிருந்தது.
இந்நிலையில் மத்திய அமைச்சர் உள்ளாட்சித் தேர்தலை நடத்தவில்லை என்றால் உள்ளாட்சிகளுக்கான நிதியை விடுவிக்க மாட்டோம் என தெரிவித்துள்ளதால் தமிழகத்துக்கு மத்திய அரசின் நிதி கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.

