புதுடெல்லி: உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கு அக்டோபர் 31ஆம் தேதி வரை காலஅவகாசம் வேண்டும் என தமிழக அரசு கோரிக்கை விடுத்திருந்தது.
இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம், தேர்தல் அறிவிப்பை மேலும் காலம்தாழ்த்தாமல் குறித்த நேரத்தில் வெளியிட வேண்டும் என்றும் மாநில தேர்தல் ஆணையத்துக்கு அறிவுறுத்தி உள்ளது.
இந்நிலையில் உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பு அக்டோபர் இறுதியில் உறுதியாக வெளியிடப்படும், அதில் இனியும் குழப்பம் ஏற்படாது என்று தேர்தல் ஆணையம் உச்ச நீதிமன்றத்திடம் உறுதி அளித்துள்ளது.
தமிழகத்தில் உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம் முடிவடைந்து இரண்டரை ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், இதுவரை உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படவில்லை.
இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்திலும் உயர் நீதிமன்றத்திலும் வழக்கு நிலுவையில் உள்ளன.
இதற்கிடையே உள்ளாட்சித் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என வழக்கறிஞர் ஜே எஸ் ஜெய்சுகின் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்த மாநில தேர்தல் ஆணையம், தமிழகத்தில் அக்டோபர் 31 வரை உள்ளாட்சித் தேர்தலை நடத்த இயலாது என கூறியிருந்தது.
"மாநிலத்தில் நிலவி வரும் குடிநீர் பிரச்சினையில் அரசு கவனம் செலுத்தி வருகிறது. இதனால் வார்டு வரையறை பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில் அக்டோபர் இறுதி வரை உள்ளாட்சித் தேர்தலை நடத்த வாய்ப்பில்லை," என தமிழக தேர்தல் ஆணையம் கூறியது.
அதன்பின்னர் இந்த வழக்கு நேற்றும் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
அப்போது அக்டோபருக்குள் வார்டு மறுசீரமைப்புகளை முடித்துவிடுவதாக மாநில தேர்தல் ஆணையம் உறுதி அளித்துள்ளது. தேர்தல் ஆணையத்தின் இந்த உத்தரவாதத்தை ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம், தேர்தல் அறிவிப்பை அக்டோபரில் வெளியிட உத்தரவிட்டுள்ளது.

