துரைமுருகன்: திமுகவுக்கு வெற்றிவாய்ப்பு

துரைமுருகன்: திமுகவுக்கு வெற்றிவாய்ப்பு

2 mins read

வேலூர்: வேலூர் தொகுதிக்கு வருகின்ற ஆகஸ்ட் 5ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், திமுக சார்பில் கட்சியின் பொருளாளர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் போட்டியிடுகிறார். இவர் நேற்று தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார்.

மகனின் வேட்பு மனு தாக்கலைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த துரைமுருகன், "வேலூர் மக்களவைத்தொகுதியில் திமுகவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாரமாக உள்ளது.

"மத்திய, மாநில அரசுகள் மீதான எங்களது நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமும் இல்லை. மாநிலத்தில் அதிமுக அரசு மாற்றப்பட வேண்டும் என்பதே எங்களது நிலைப்பாடாக உள்ளது," என்றார்.

வேலூர் ேதர்தலுக்கான வேட்புமனுக்களைத் தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள் என்ற நிலையில் நேற்று கதிர் ஆனந்த் தனது மனுவைத் தாக்கல் செய்தார்.

ஏற்கெனவே அதிமுக கூட்டணியின் சார்பில் புதிய நீதிக்கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம் போட்டியிட உள்ளார்.

கடந்த ஏப்ரல் 18ஆம் தேதி தமிழகத்தில் மக்களவை, சட்டமன்ற இடைத்தேர்தல்கள் நடத்தப்பட்டன. அப்போது பணப்பட்டுவாடா, பணம் பறிமுதல் உள்ளிட்ட காரணங்களால் வேலூர் மக்களவைத் தொகுதிக்கு மட்டும் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. ஆகஸ்ட் 11ஆம் தேதி இத்தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

இதற்கிடையே, வேலூர் மக்களவை தொகுதிக்கான இடைத்தேர்தலில் திமுகவிற்கு வாக்களிக்கவேண்டாம் என்று ஏசி சண்முகம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

"திமுகவிற்கு வாக்களித்தால் எந்த ஒரு பயனும் ஏற்படாது," என்றும் அவர் கூறினார்.

பல்வேறு அரசியல் கட்சிகளும் வேலூரில் தங்கள் பிரசாரத்தை தொடங்கியுள்ளன. தனது முதல்கட்ட பிரசாரத்தை தொடங்கி யுள்ள ஏசி சண்முகம் செய்தியாளர்களிடம் கூறுகையில், "கடந்த முறை போன்று தற்போதும் திமுக தில்லுமுல்லு வேலைகளில் ஈடுபட்டுள்ளது.

"வாக்காளர்களுக்கு விநியோகம் செய்ய கோடிக்கணக்கில் பணத்தைப் பதுக்கிவைத்துள்ளனர். அதாவது 60 இடங்களில் பணத்தை மறைத்து வைத்துள்ளனர். அதில் ஓரிடத்தில் மட்டும் ரூ.27 லட்சம் சிக்கியிருக்கிறது.

"இதுவொரு அரசியல் கட்சிக்கு அழகல்ல.

"வாக்குறுதிகள் அளித்து வாக்குகளைக் கேளுங்கள். ஏன் மீண்டும் பணம் கொடுக்க முயற்சிக்கிறீர்கள்?" என்று கேட்டுள்ளார் சண்முகம்.