இன்று போராட்டம் நடத்தும் அரசு மருத்துவர்கள்

இன்று போராட்டம் நடத்தும் அரசு மருத்துவர்கள்

1 mins read

சென்னை: மக்களின் உயிர்களைக் காக்கும் உன்னத பணிக்கு முறையான ஊதிய உயர்வு வழங்கவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி புறநோயாளிகள் சிகிச்சையை இன்று ஜூலை 18ஆம் தேதி புறக்கணிக்கப்போவதாக அரசு மருத்துவர்கள் அறிவித்துள்ளனர்.

இன்று தமிழகம் முழுவதும் அவசர சிகிச்சைப் பிரிவில் உள்ள நோயாளிகளுக்கு மட்டுமே சிகிச்சை அளிக்கப்படும். புற நோயாளிகளுக்கான சிகிச்சையைப் புறக்கணிப்போம் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இதுகுறித்து அரசு மருத்துவர்கள், பட்ட மேற்படிப்பு மருத்துவர்கள் சங்க நிர்வாகிகள் கூறுகையில், "தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்களின் ஊதியத்தை உயர்த்தவேண்டும்.

"அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் உள்ள மருத்துவர்களின் பணியிடங்களைக் குறைக்கக் கூடாது," என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த சில நாட்களாக போராட்டங்களை நடத்தி வந்தோம். எனினும் அதற்கெல்லாம் எந்த ஒரு பலனும் கிட்டவில்லை.

இதையடுத்து, அரசின் கவனத்தை ஈர்க்கும் விதமாக இன்று தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் புறநோயாளிகள் சிகிச்சையை 2 மணி நேரம் புறக்கணித்துப் போராட்டத்தில் ஈடுபடுவதென முடிவு செய்துள்ளோம் என்று அவர்கள் தெரிவித்தனர்.