உப்பளம் தொகுதி எம்எல்ஏ அன்பழகன்: சுத்தமான நீர் வழங்காவிடில் போராட்டம் வெடிக்கும்

உப்பளம் தொகுதி எம்எல்ஏ அன்பழகன்: சுத்தமான நீர் வழங்காவிடில் போராட்டம் வெடிக்கும்

1 mins read

புதுச்சேரி: தனது தொகுதியில் குடிநீர் கலங்கலாக விநியோகம் செய்யப்படுவதாக பொதுப்பணித் துறை அதிகாரியிடம் உப்பளம் தொகுதி எம்எல்ஏ அன்பழகன் புகார் தெரிவித்துள்ளார்.

தனது தொகுதியில் விநி யோகிக்கப்பட்ட கலங்கலான குடிநீரை பாட்டிலில் எடுத்துக் கொண்டு பொதுப்பணித்துறை பொது சுகாதார அலுவலகத்துக்கு நேற்று வந்த அவர், பொறியாளர் ரவிச்சந்திரனிடம் பாட்டிலில் எடுத்து வந்திருந்த குடிநீரைக் காண்பித்து உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு புகார் அளித்தார்.

இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என ரவிச்சந்திரன் உறுதியளித்தார். இதுகுறித்து, அன்பழகன் எம்.எல்.ஏ., கூறும்போது, 'பொதுப்பணித் துறையால் சுகாதாரமற்ற முறையில் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. திருக்காஞ்சியில் இருந்து குழாய் மூலம் எடுத்து வரப்படும் தண்ணீர் சுத்திகரிக்கப்படாமல் விநியோகம் செய்யப்படுவதால் வயிற்றுக் கோளாறு உள்ளிட்ட பல்வேறு நோய்களால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.

மக்களுக்கு சுத்தமான குடிநீரை வழங்கவேண்டும் என வலியுறுத்தி 5 முறை போராட்டம் நடத்தி விட்டேன். இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால் மக்களைத் திரட்டி சட்டசபையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.