அதிமுக, திமுக வேட்புமனு பரிசீலனை நிறுத்தம், பரபரப்பு

அதிமுக, திமுக வேட்புமனு பரிசீலனை நிறுத்தம், பரபரப்பு

2 mins read

வேலூர்: வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடுவதற்காக அதிமுக சார்பில் ஏ.சி. சண்முகமும் திமுக சார்பில் கதிர் ஆனந்தும் தாக்கல் செய்த வேட்பு மனு பரிசீலனையை அதிகாரிகள் திடீரென்று நிறுத்திவிட்டதால் நேற்று ஒரே பரபரப்பு கிளம்பியது.

வேலூர் தொகுதியில் அடுத்த மாதம் 5ஆம் தேதி தேர்தல் நடக்கிறது. அதற்கான வேட்பு மனுத் தாக்கல் இம்மாதம் 11ஆம் தேதி தொடங்கியது. வியாழக்கிழமை முடிவடைந்தது. மொத்தம் 50 பேர் மனுத் தாக்கல் செய்தனர்.

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் அலுவலரும் ஆட்சியருமான சண்முகசுந்தரம் தலைமையில் நேற்று மனுக்கள் பரிசீலிக்கப்பட்டன.

அந்தப் பரிசீலனையில் அதிமுக சார்பில் மாவட்ட பொருளாளரான மூர்த்தி என்பவரும் வழக்கறிஞர்களும் திமுக சார்பில் வேட்பாளரான கதிர் ஆனந்தும் அவருடைய தந்தையான துரைமுருகனும் இதர பிரமுகர்களும் கலந்துகொண்டனர். இந்த நிலையில், வேட்பு மனு பரிசீலனையில் கலந்துகொண்ட சுயேச்சை வேட்பாளர்கள் சிலர் பிரச்சினைகளைக் கிளப்பிவிட்டார்கள்.

அதிமுக சார்பில் போட்டியிடும் சண்முகம், புதிய நீதிக் கட்சியின் தலைவர். அதிமுகவின் அடிப்படை உறுப்பினராக இல்லாத அவர், இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடப்போவதாக தெரிவித்து இருக்கிறார்.

தேர்தல் சட்டப்படி இது செல்லாது என்பதால் அவரின் மனுவை நிராகரிக்க வேண்டும் என்று ரவி என்ற சுயேச்சை வேட்பாளர் கோரினார். இதனால் ஒரே சலசலப்பு கிளம்பியது.

சுயேச்சை வேட்பாளரின் கோரிக்கையை அடுத்து ஏ.சி. சண்முகத்தின் மனு மறுபரிசீலனை நிறுத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில் குறுக்கிட்ட அதிமுகவினர், சண்முகம் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட முடிவு செய்தபோது அவர் அதிமுக அடிப்படை உறுப்பினராகச் சேர்க்கப்பட்டார் என்றும் வேட்பு மனுவில் எல்லா விவரங்களும் இருப்பதாகவும் வாதாடினர்.

இதனிடையே, பணப்பட்டுவாடா புகார் இருப்பதால் கதிர் ஆனந்த் வேட்புமனுவை நிராகரிக்க வேண்டும் என சுயேச்சை வேட்பாளர் ஒருவர் எதிர்ப்பு தெரிவித்ததால் அவருடைய வேட்பு மனு பரிசீலனையும் நிறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

கடைசியில் திமுக சார்பில் போட்டியிடும் கதிர் ஆனந்த், அதிமுக சார்பில் போட்டியிடும் ஏ.சி.சண்முகம் ஆகிய இரு வரின் வேட்புமனுக்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.