துரைமுருகன்: இன்னமும் சதி தொடர்கிறது

ஆம்பூர்: திமுகவின் பொருளாளரான துரைமுருகன், தன் மகனுக்கு எதிராக தொடர்ந்து சதி வேலைகள் நடந்து வருவதாக புகார் தெரிவித்து இருக்கிறார். 

வேலூரில் அடுத்த மாதம் 5ஆம் தேதி நடக்கவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலையொட்டி ஆம்பூரில் திமுக தேர்தல் அலுவலகத்தைத் திறந்து வைத்துப் பேசிய அவர், தன் மகனை லாரி ஏற்றி கொலை செய்ய முயன்றவர்கள் பற்றி தனக்குத் தெரியும் என்று குறிப்பிட்டார். 

அதே சதிகாரர்கள்தான் தன்னுடைய வீட்டில் வருமான வரி சோதனை நடத்த அதிகாரிகளுக்கு உடந்ததையாக இருந்தார்கள் என்றும் தன் வீட்டு தோட்டத்தில் பணத்தைப் பதுக்கி வைத்தவர்கள் அவர்கள்தான் என்றும் துரைமுருகன் தெரிவித்தார். 

தன் வீட்டில் சோதனைகள் நடத்துவதற்காக ஓய்வு பெற்ற அதிகாரிகளை நியமித்த அதே பேர்வழிகள்தான்  தொடர்ந்து சதிவேலைகளைச் செய்துவருகிறார்கள் என்றும் வேலூர் தொகுதியில் தன் மகன் கதிர்ஆனந்த் போட்டியிடுவதைத் தவிர்ப்பதற்காக பிரம்மாண்டமான சதித்திட்டத்தை அவர்கள் கட்டவிழ்த்து விட்டு இருக்கிறார்கள் என்றும் துரைமுருகன் குறிப்பிட்டுபரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.

எவ்வளவு பிரச்சினைகள் வந்தாலும் தானும் தன் மகனும் உயிருள்ளவரை திமுகவில் தொடர்ந்து இருந்து வரப்போவதாகவும் துரைமுருகன் உறுதிபட கூறினார். 

கடந்த மே மாதம் நாடாளுமன்றத் தேர்தல் நடந்தபோது இந்தியாவில் வேலூர் தொகுதியில் மட்டும்தான் தேர்தல் ரத்தானது. திமுக சார்பில் துரைமுருகனின் புதல்வர் போட்டியிட்ட நிலையில் திமுக பிரமுகர்கள் வீட்டிலிருந்து ஏராளமான பணம் கைப்பற்றப்பட்டதை அடுத்து தேர்தல் ரத்தானது. 

இந்த முறையும் திமுக சார்பில் கதிர் ஆனந்த் போட்டியிடுகிறார். அவரின் வெற்றி உறுதி என்று திமுகவினர் கூறுகிறார்கள்.

 

 

 

இப்பகுதியில் மேலும் செய்திகள்

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் ‘மீனாட்சிபுரம் மதமாற்றம்' தொடர்பாக தாக்கல் செய்த ஆய்வுக் கட்டுரை அடிப்படையில் பிஎச்டி பட்டம் பெற்றார்.  படம்: தமிழக ஊடகம்

24 Aug 2019

முனைவராகிறார் தொல் திருமாவளவன்