பாஜகவை திமுக நெருங்குவதாக காங்கிரஸ் சந்தேகப் பார்வை

பாஜகவை திமுக நெருங்குவதாக காங்கிரஸ் சந்தேகப் பார்வை

2 mins read

சென்னை: புதிய புதிய அரசியல் நிலவரங்களைப் பார்க்கையில் தமிழ்நாட்டின் மிக முக்கிய எதிர்க்கட்சியான திமுக கொஞ்சம் கொஞ்சமாக பாஜக பக்கம் சாயத் தொடங்கி இருக்கிறது என்று காங்கிரஸ் கட்சி சந்தேகப்படுவதாக அரசியல் அரங்கில் பேச்சு அடிபடுகிறது.

இதுநாள் வரை அரசியலில் சேர்ந்து செயல்பட்டு வரும் திமுகவுக்கும் காங்கிரசுக்கும் இடையில் அண்மைய காலமாக கசப்பு அதிகரித்து வருவதாகத் தெரிகிறது.

உள்ளாட்சித் தேர்தலில் திமுகவிடம் அதிக இடம் கேட்கவேண்டும் என்று காங்கிரஸ் கட்சி முடிவு செய்து இருப்பதாகவும் திமுகவுடன் கூட்டை முறித்துக்கொள்ளலாம் என்று சில காங்கிரஸ் தலைவர்கள் கருதுவதாகவும் கூறப்படுகிறது.

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு மாநிலங்களவைப் பதவியைத் தர திமுக முன்வராமல் போனதும் காங்கிரசுக்கு அதிருப்தியைக் கிளப்பிவிட்டு இருக்கிறது.

நாங்குநேரி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக இளைஞர் அணித் தலைவர் உதயநிதி போட்டியிட ஏதுவாக அந்தத் தொகுதியில் இருந்து விலகிக்கொள்ள காங்கிரஸ் விரும்பவில்லை என்றும் தெரிகிறது.

இந்த நிலையில், அடுத்த மாதம் நடக்கவிருக்கும் வேலூர் நாடாளுமன்றத் தொகுதி தேர்தலில் காங்கிரஸ் பிரமுகரும் முன்னாள் எம்எல்ஏவும் ஆன வாலாஜாபாத் அசேன் என்பவர் வேலூரில் திமுகவுக்கு எதிராக களத்தில் குதித்து இருக்கிறார்.

முரசொலி அலுவலகத்தில் அடுத்த மாதம் நடக்கும் கருணாநிதி சிலைதிறப்பு விழாவுக்கு காங்கிரசுக்கு அழைப்பு அனுப்பப்படவில்லை.

இப்படிப்பட்ட ஒரு சூழலில் மக்களவையில் மத்திய அரசு கொண்டு வந்த தேசிய புலனாய்வு முகவை சட்டத் திருத்தத்தை திமுக ஆதரித்து இருப்பதைக் கண்டு காங்கிரஸ் திடுக்கிட்டு இருக்கிறது.

திமுகவின் இந்த நடவடிக்கையில் அரசியல் உள்நோக்கம் இருப்பதாகக் காங்கிரஸ் கட்சியினர் கூறுகிறார்கள்.

"திமுக, பாஜக பக்கம் மெல்ல சாய்கிறது. மற்ற கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் கோரிக்கைகளை அவ்வளவாகக் கண்டுகொள்ளாத மத்திய அமைச்சர்கள், திமுக உறுப்பினர்களின் கோரிக்கையை உடனுக்குடன் கவனிக்கிறார்கள்.

"பாஜக தேசிய தலைவர் அமித்ஷாவுடன் ஸ்டாலின் குடும்ப உறுப்பினர் அணுக்கத் தொடர்பில் இருந்து வருகிறார். இவை எல்லாம் திமுக-காங்கிரஸ் கூட்டுக்கு ஏற்ற காரியமாகத் தெரியவில்லை," என்று காங்கிரஸ் கட்சியினர் தெரிவிக்கிறார்கள். அண்மையில் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் படுதோல்வி அடைந்ததை அடுத்து காங்கிரஸ் கட்சி மோசமாக சிதைந்து வருகிறது.

இந்த நிலையில், தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியை திமுக கைவிட வேண்டும் என்றும் பாஜக காய்களை ரகசியமாக நகர்த்தி வருவதாகவும் கூறப்படுகிறது.