சேலம்: தமிழகத்தில் தொழில் வளர்ச்சிக்குச் சாலை உள்கட்டமைப்பு மிக அவசியம் என்று தெரிவித்த முதல்வர் பழனிசாமி, அதற்காக நிலம் தேவைப்படும்போது அதை மனமுவந்து மக்கள் கொடுக்க வேண்டும் என்று கோரினார்.
பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள சேலம் சென்றுள்ள முதலமைச்சர் புதிய வழித்தடங்களில் செல்லும் பேருந்துகளைத் தாரமங்கலத்தில் தொடங்கிவைத்தார்.
கொங்கணாபுரம் வடகரை வாய்க்கால் - நரிமேடு சாலை, தொளசம்பட்டி சாலையில் இரு மேம்பாலங்களையும் அவர் திறந்து வைத்தார். திருச்செங்கோடு- சங்ககிரி - கொங்கணாபுரம் - தாரமங்கலம்- ஓமலூர் சாலை, 4 வழிச்சாலையாக விரிவுபடுத்தப்படும் என்றும் முதலமைச்சர் அறிவித்தார்.
சேலம் -சென்னை 8 வழிச்சாலையை அமைக்க முதல்வர் விரும்புவதாக அதிமுக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

