லஞ்சப் புகார்: போலிஸ்காரர்கள், அரசு அதிகாரிகள் என 10 பேர் மீது வழக்கு

லஞ்சப் புகார்: போலிஸ்காரர்கள், அரசு அதிகாரிகள் என 10 பேர் மீது வழக்கு

2 mins read

சென்னை: திருப்போரூரைச் சேர்ந்த பார் ஒப்பந்ததாரர் நெல்லையப்பன் என்பவர் கடந்த மே மாதம் 28ஆம் தேதி மாமல்லபுரம் டிஎஸ்பி அலுவலகத்தில் உயிரை மாய்த்துக் கொண்டார்.

இறப்பதற்கு முன்பு பரபரப்பான காணொளி ஒன்றையும் அவர் வெளியிட்டு இருந்தார். அதில் அதிமுக பிரமுகர் ஒருவர் பெயரைக் குறிப்பிட்டு பணம் கேட்டு மிரட்டுவதாகவும் குற்றம்சாட்டி இருந்தார்.

இதுதொடர்பாக டிஎஸ்பியாக இருந்த சுப்புராஜிடம் நெல்லையப்பன் புகார் அளித்திருந்தார். இதில் உரிய நடவடிக்கை எடுக்கப்படாத காரணத்தினாலேயே உயிரை மாய்த்துக்கொள்வதாகக் கூறி இருந்தார்.

இதுபற்றி லஞ்ச ஒழிப்பு போலிசார் கடந்த 2 மாதங்களாக ரகசிய விசாரணையில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் சென்னை, காஞ்சிபுரத்தில் 20 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலிசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

போலிஸ் அதிகாரிகள், டாஸ்மாக், கலால் துறை அதிகாரிகள் 10 பேரின் வீடுகளில் நடந்த இந்தச் சோதனை நடந்தது.

இது தொடர்பாக காவல்துறை ஆய்வாளர்கள், காவல்துறை உதவி கண்காணிப்பாளர்கள் உட்பட 7 போலிஸ் அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இவர்கள் தவிர காஞ்சிபுரம் மாவட்ட டாஸ்மாக் மேலாளரான அய்யாவு, கலால்துறை உதவியாளராக பணியாற்றிய அகமதுல்லா, பாலகிருஷ்ணன் ஆகியோர் மீதும் லஞ்ச ஒழிப்பு போலிசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இவர்கள் அனைவரும் சேர்ந்து பார் ஒப்பந்ததாரர் நெல்லையப்பனிடம் லஞ்சம் வாங்கியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கூட்டு சதி, மோசடி, லஞ்ச ஊழல் தடுப்பு சட்டம் உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

லஞ்ச ஒழிப்பு போலிசாரின் விசாரணை வளையத்துக்குள் சிக்கியுள்ள இந்த அதிகாரிகள் தங்களது கடமையை மீறி முறைகேடாக செயல்பட்டுள்ளதாக முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் அனுமதியின்றி சட்டவிரோதமாக பார் நடத்துவதற்கு பார் உரிமையாளர்களிடம் இருந்து மாதந்தோறும் லஞ்சம் பெற்றதன் மூலம் முறையாக அரசுக்குச் செல்ல வேண்டிய வருவாயில் இழப்பை ஏற்படுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊழல் குற்றச்சாட்டுக்குள்ளாகி உள்ள 10 அதிகாரிகளும் விரைவில் பணி இடைநீக்கம் செய்யப்படவும் வாய்ப்பு உள்ளது.

புகாருக்குள்ளான அதிகாரிகள் அனைவரது சொத்து விவரங்கள் பற்றியும் லஞ்ச ஒழிப்பு போலிசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.