எச்ஐவி தொற்றி 20 ஆண்டுகளுக்கு பிறகு இழப்பீடு, அரசாங்க வேலை

எச்ஐவி தொற்றி 20 ஆண்டுகளுக்கு பிறகு இழப்பீடு, அரசாங்க வேலை

2 mins read

சென்னை: எச்ஐவி கிருமியால் பாதிக்கப்பட்ட ரத்தம் 20 ஆண்டுகளுக்கு முன்பு அரசு குழந்தைகள் மருத்துவமனை ஒன்றில் தவறுதலாக ஒரு சிறுவனுக்கு ஏற்றப்பட்டது. அதனால் பாதிக்கப்பட்டவருக்கு ரூ.20 லட்சம் (6% வருடாந்திர வட்டியுடன்) இழப்பீடும் அவரால் செய்ய முடிகிற அரசு வேலை ஒன்றும் வழங்க வேண்டுமென நீதிமன்றத்தில் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

"கவனக்குறைவாக சிகிச்சை அளித்ததற்கு அந்த மருத்துவமனையில் சிறுவனுக்குத் தவறுதலாக ரத்தம் ஏற்றிய மருத்துவர்கள்தான் பொறுப்பு என்ற நீதிபதி தேன்மொழி, அந்த மருத்துவமனை 20 லட்சம் ரூபாயை அளிக்க வேண்டும் என உத்தரவிட்டார். வழக்கு பதியப்பட்ட தேதியிலிருந்து ஆண்டுக்கு 6% வட்டியுடன் நஷ்ட ஈடு வழங்க உத்தரவிடப்பட்டது. மேலும், வழக்குக்கான செலவாக ஒன்றரை லட்ச ரூபாயையும் அவருக்கு மருத்துவமனை வழங்க வேண்டும்.

பாதிக்கப்பட்ட ஆடவரின் கல்வித் தகுதிக்கேற்ப அவர் செய்வதற்கு ஏற்ற பணி ஒன்றை அவருக்கு வழங்க வேண்டும் எனவும் அவர் அரசாங்கத்தைக் கேட்டுக்கொண்டார்.

வயிற்றுப்போக்குக்கு சிகிச்சை பெற 1998ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் அப்போது ஆறு மாதக் குழந்தையாக அவர் சென்னையிலுள்ள அரசு குழந்தைகள் சுகாதார, குழந்தைகள் மருத்துவமனையில் (ஐசிஎச்) அனுமதிக்கப்பட்டார்.

சிறுகுடலும், பெருங்குடலும் பின்னியிருந்ததைச் சரிசெய்ய அவருக்கு உடனடியாக அறுவைசிகிச்சை செய்ய வேண்டியதாயிற்று. அப்போது ரத்தம் ஏற்றப்பட்டது. 1999ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் வீட்டுக்கு அனுப்பப்பட்ட சிறுவனுக்கு இரு தினங்களில் மீண்டும் உடல் நலக் குறைவு ஏற்பட்டது.

பின்னர் 1999ஆம் ஆண்டு செப்டம்பரில் கழுத்து வீங்கிய நிலையில் சிறுவனுக்கு ஜலதோஷம் பிடித்தது. அதனையடுத்து தாம்பரத்தில் உள்ள தொராசிக் மருத்துவ நிலையத்துக்கு அனுப்பப்பட்ட சிறுவனுக்கு எச்ஐவி தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

அதனையடுத்து மருத்துவச் செலவுகளுக்காக 50,000 ரூபாய் கோரி வழக்கு தொடுக்க உயர் நீதிமன்றம் பரிந்துரைத்தது. ஆனால், அதனைத் தர மறுத்த மருத்துவமனை, தாங்கள் ஏற்றிய ரத்தம் எச்ஐவி, ஹெபடைடிஸ் பி போன்ற கிருமிகளுக்கான பரிசோதனைகளுக்கு உட்பட்டது என்றும், ஐந்தாண்டுகளுக்கு மேல் ஆவணங்கள் பாதுகாக்கப்பட வேண்டிய அவசியம் இல்லாததால் ஆவணங்களைச் சமர்ப்பிக்க இயலவில்லை என்றும் கூறியது.

ஆவணங்களுடன் நிரூபிக்க இயலாததால் பாதிக்கப்பட்ட ஆடவருக்குச் சாதகமாக தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.