சட்டையைக் கழற்றி திடீரென முழக்கமிட்ட முகிலன்

சட்டையைக் கழற்றி திடீரென முழக்கமிட்ட முகிலன்

2 mins read

கரூர்: காணாமல்போய் பின்னர் திருப்பதியில் கண்டுபிடிக்கப்பட்ட சிறையில் அடைக்கப்பட்ட முகிலன் நேற்று நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டபோது சட்டையைக் கழற்றி முழக்கமிட்டார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

திருச்சி மத்திய சிறையிலிருந்து நேற்று காலை முகிலனை போலிசார் பலத்த பாதுகாப்புடன் கரூர் நீதிமன்றத்துக்கு வேனில் அழைத்து வந்தனர்.

அப்போது வேனிலிருந்து இறங்கிய முகிலன் திடீரென தான் அணிந்திருந்த சட்டையை கழற்றி முழக்கமிட்டார்.

"கைது செய், கைது செய், சிறையில் என்னைத் தாக்கிய சிறைக்காவலர்களை கைது செய்," என்று அவர் முழக்கமிட்டார்.

சிறையில் தன்னை கொலை செய்ய சதி திட்டம் தீட்டப் பட்டுள்ளதாகவும் அவர் புகார் தெரிவித்தார்.

இதனால் நீதிமன்ற வளாகத்தில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில் போலிசார் அவரை குண்டுக்கட்டாக தூக்கிச்சென்று நீதிபதி முன்பு முன்னிலைப்படுத்தினர்.

இதையடுத்து அவரிடம் நீதிபதி விஜயகார்த்திக் விசாரணை நடத்தினார்.

தூத்துக்குடி 'ஸ்டெர்லைட்' ஆலை, கூடங்குளம் அணுமின் நிலையம் உள்பட பல்வேறு பிரச்சினைகளுக்கு எதிராக போராட்டங்கள் நடத்தி வந்த தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரும் சமூக ஆர்வலருமான முகிலன் கடந்த பிப்ரவரி மாதம் 15ஆம் தேதி சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் காணாமல் போனார்.

சிபிசிஐடி போலிசார் தேடி வந்த நிலையில் கடந்த 6ஆம் தேதி திருப்பதி ரயில் நிலையத்தில் அவரை போலிசார் மீட்டனர்.

பின்னர் அவரை போலிசார் சென்னை எழும்பூர் சிபிசிஐடி அலுவலகத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜேஸ்வரி, 37, என்பவர் குளித்தலை போலிசில் பாலியல் பலாத்காரம் செய்ததாக அவர் மீது புகார் அளித்துள்ளதால் அதன் அடிப்படையில் முகிலன் சிறையில் வைக்கப்பட்டுள்ளார்.