பெற்றோரை முதியோர் இல்லத்தில் தள்ளிய மகள்கள்

பெற்றோரை முதியோர் இல்லத்தில் தள்ளிய மகள்கள்

1 mins read

பேரையூர்: பெற்றோரின் சொத்துகளை அபகரித்துக் கொண்டு அவர்களை முதியோர் இல்லத்தில் தள்ளிய இரு மகள்களின் சொத்துகள் பறிக்கப்பட்டுள்ளன.

மதுரை அருகே உள்ள திருநகர் பாண்டியன் நகரைச் சேர்ந்த அழகர்சாமி, 74, அவரது மனைவி சகுந்தலா, 70, ஆகியோர் தங்களுக்குச் சொந்தமான பாண்டியன் நகரில் உள்ள வீடு, 90 பவுன் நகைகள், காரை தனது மகள்கள் கிருத்திகா, சியாமளா ஆகியோர் அதே பகுதியை சேர்ந்த கணேசனுடன் சேர்ந்து அபகரித்துக் கொண்டதாகவும் பின்னர் தங்களை திருப்பரங்குன்றத்தில் உள்ள லட்சுமி முதியோர் இல்லத்தில் விட்டுவிட்டதாகவும் இதனால் மிகவும் சிரமப்படுவதாகவும் தமிழ்நாடு மூத்த குடிமக்கள் நல ஆணையத்தில் புகார் தெரிவித்தனர். இதையடுத்து மதுரை மாவட்ட ஆட்சியர் ராஜசேகரின் உத்தரவின்பேரில் திருமங்கலம் கோட்டாட்சியர் முருகேசன், அழகர்சாமி தம்பதியரை நேரில் அழைத்து விசாரித்தார்.

பெற்றோரின் சொத்துகளை அபகரித்த மகள் கிருத்திகா, சியாமளா மற்றும் உதவி செய்த கணேசனிடமும் விசாரணை நடைபெற்றது. அப்போது சொத்துகளைப் பறித்துக்கொண்டு பெற்றோரை கவனிக்காமல் இரு மகள்களும் கைவிட்ட விவரம் தெரியவந்தது. இதனால் மகள்களிடம் இருந்த ரூ. 70 லட்சம் மதிப்புள்ள வீட்டின் பதிவை ரத்து செய்த ஆர்டிஓ முருகேசன் அந்த வீட்டை மீண்டும் அழகர்சாமி- சகுந்தலா தம்பதியிடம் ஒப்படைக்க உத்தரவிட்டார்.

மேலும் 90 பவுன் நகை, காரை மீட்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.