வேலூரில் தீவிர பிரசாரத்தில் களமிறங்கிய திமுக, அதிமுக

வேலூரில் தீவிர பிரசாரத்தில் களமிறங்கிய திமுக, அதிமுக

2 mins read

சென்னை: வேலூர் மக்களவைத் தேர்தலையொட்டி பிரசாரப் பணி களுக்காக வெளிமாவட்டங்களில் இருந்து ஆளும் கட்சியான அதிமுக, எதிர்க்கட்சியான திமுக ஆகிய இரு கட்சிகளின் சார்பிலும் ஆயிரக்கணக்கானோர் தொகுதி முழுவதும் களமிறங்கியுள்ளனர்.

இவர்கள் வீதிவீதியாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளதை அடுத்து வேலூர் மக்களவைத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் நடந்த மக்களவைத் தேர்தலின்போது தமிழகத்தில் உள்ள 38 தொகுதிகளில் அதிமுக கூட்டணியால் ஒரே ஒரு தொகுதியை மட்டுமே வெற்றி பெற முடிந்தது.

மற்ற அனைத்து தொகுதிகளிலும் திமுக கூட்டணியே வெற்றி பெற்றது.

இந்த அமோக வெற்றியை இந்த வேலூர் தொகுதி தேர்தலிலும் தக்க வைத்துக்கொள்ள திமுக அதிக ஆர்வம் காட்டி வருகிறது.

"அண்மையில் நடைபெற்ற தேர்தலில் திமுக பெற்ற வெற்றியைக் காட்டிலும் வேலூர் தேர்தலில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வெற்றிபெறும்," என்று அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

அதேசமயம் எதிர்வரும் உள்ளாட்சித் தேர்தல் உள்ளிட்ட அனைத்துத் தேர்தல்களுக்கும் அடித்தளமாக வேலூர் தொகுதியை அதிமுக கருதுகிறது.

இதனால், வேலூர் தொகுதியில் எப்படியும் வெற்றிபெற்றுவிட திமுக முனைப்புக் காட்டி வருகிறது.

இத்தேர்தலில் அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம், திமுக வேட்பாளர் டி.எம்.கதிர் ஆனந்த், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் எஸ்.தீபலட்சுமி உள்ளிட்ட 28 பேர் போட்டியிடுகின்றனர்.

இதையடுத்து அதிமுக சார்பில் தமிழக அமைச்சர்கள் தலைமையில் 209 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழுவினரும் திமுக சார்பில் எம்பிக்கள், எம்எல்ஏக்கள், முன்னாள் அமைச்சர்கள் தலைமையில் சுமார் 70 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழுவினரும் களமிறக்கப்பட்டு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

வேலூர், கொசப்பேட்டை பகுதியில் அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகம் தனது பொதுக்கூட்ட பிரசாரத்தைத் ெதாடங்கிய நிலையில், இவரை ஆதரித்து அதிமுக அமைச்சர்கள் செங்கோட்டையன், உடுமலை ராதாகிருஷ்ணன் ஆகியோர் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

இதேபோல், சத்துவாச்சேரி பகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கதிர் ஆனந்தும் வாக்குச் சேகரிப்பில் ஈடுட்டார்.

கட்டுக்கட்டான பணப்பட்டுவாடா புகார் காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் ரத்து செய்யப்பட்ட வேலூர் தேர்தல் ஆகஸ்ட் 5ல் நடக்க உள்ளது.

இதைத் தொடர்ந்து, முதல்வர்பழனிசாமி இன்றுமுதலும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நாளையும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் 29ஆம் தேதியும் பிரசாரத்தைத் தொடங்க இருப்பதாகவும் ஊகடத் தகவல்கள் தெரிவித்துள்ளன.