பள்ளி வேன் கவிழ்ந்ததில் 26 மாணவர்கள் படுகாயம்

பள்ளி வேன் கவிழ்ந்ததில் 26 மாணவர்கள் படுகாயம்

1 mins read

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் பள்ளி மாணவர்களை ஏற்றிக்கொண்டு சென்ற வேன் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த 20க்கும் மேற்பட்ட மாணவர்கள் படுகாயம் அடைந்தனர்.

திண்டுக்கல் அருகில் உள்ள முள்ளிப்பாடியில் சூசையப்பர் நடுநிலைப்பள்ளி உள்ளது. இங்கு சுமார் 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். கிராமப்புற பள்ளி என்பதால் பள்ளி வாகனம் எதுவும் இல்லை.

இதனால் மோளப்பாடியூர், எட்டிகுளத்துப்பட்டி, இ.புதூர், கோவிலூர், மகாலட்சுமிபட்டி ஆகிய கிராமங்களில் இருந்து தனியார் வேன்கள் மூலம் பள்ளிக்கு மாணவ-மாணவிகள் வருகின்றனர்.

நேற்று காலையி்ல் வழக்கம் போல் 40க்கும் மேற்பட்ட மாணவர்களை ஏற்றிக்கொண்டு வேன் பள்ளியை நோக்கி வந்து கொண்டிருந்தது.

அப்போது மோளப்பாடியூர் அருகே வேன் ஓட்டுநர் எதிரே வந்த வாகனத்திற்கு வழிவிடுவதற்காக சாலை ஓரமாகச் சென்றுள்ளார்.

அப்போது எதிர்பாராதவிதமாக வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விபத்து குறித்து அறிந்ததும் மாணவ-மாணவிகளின் பெற்றோர் மருத்துவமனையில் குவிந்து கண்ணீர்விட்டு கதறத் தொடங்கினர்.

ஓட்டுநர் தப்பி ஓடிவிட்டார். விசாரணை தொடர்கிறது.