நெல்லை: நெல்லையின் முன்னாள் பெண் மேயர், அவரது கணவர், அவர்களது வீட்டுப் பணிப்பெண் உள்பட மூவர் ஒரே நேரத்தில் மர்ம மனிதர்களால் கொலை செய்யப்பட்டிருப்பது நெல்லை பகுதி மக்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.
இந்தக் கொலைகளின் தொடர்பில் வடமாநில கொள்ளைக் கும்பலுக்கு தொடர்பிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் தனிப்படை போலிசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதேவேளையில் பெண் ஒருவர் கொலையாளியாக இருக்க வாய்ப்புள்ளதாகவும் அதையடுத்து அப்பெண்ணைத் தேடி மதுரைக்கு மற்றொரு தனிப்படை போலிஸ் குழுவினர்் விரைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
நேற்று முன்தினம் திமுக முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி, 62, நெடுஞ்சாலைத் துறையில் ஓய்வுபெற்ற அவரின் கணவர் முருகசங்கரன், 72, இவர்களின் பணிப்பெண் மாரி ஆகிய மூவரும் ரோஸ் நகரில் இருக்கும் வீட்டில் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுக் கிடந்தனர்.
இந்தக் கும்பல் கொலையையும் செய்துவிட்டு மகேஸ்வரி அணிந்திருந்த 20 பவுன் தங்க நகைகளையும் கொள்ளை அடித்துச் சென்றுள்ளது.
இதுகுறித்து தனிப்பிரிவு போலிஸ் குழுவினர் கூறியபோது, "மூவரின் கொலையையும் கொலைகாரர்கள் திட்டமிட்டே செய்துள்ளனர். இதனால் கொலையுண்ட மேயர் குடும்பத்திற்கு தெரிந்த நபர்களாகவே அந்தக் கொலைகாரர்கள் இருந்திருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது. ஏனெனில் அவரது வீட்டில் கிடைத்த தடயங்களின்படி தனது வீட்டுக்கு வந்த நபர்களை குடிக்கத் தண்ணீர் கொடுத்து உட்காரவைத்து பேசியிருக்கி்றார் உமா மகேஸ்வரி. அதன்பின்னரே கொலைச் சம்பவம் நடந்திருக்கலாம். அத்துடன் கொலையில் பெண்கள் மூவர் உட்பட ஆண்கள் இருந்திருக்கலாம் என்ற சந்தேகமும் எங்களுக்கு உள்ளது. அதன் அடிப்படையில் மதுரை கூடல் நகர் பகுதியில் இப்போது தஞ்சமடைந்துள்ள ஒரு பெண் கொலையாளியாக இருக்க வாய்ப்புண்டு என்பதால் கவனமாக அணுகி வருகின்றோம்.
பட்டப்பகலில் இப்படி ஒரு கொலைச் சம்பவம் நிகழ்ந்திருப்பது சட்ட ஒழுங்கை கேள்வி கேட்க வைத்திருப்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் தனது கண்டனத்தை பதிவு செய்தார். அத்துடன், கொலை செய்யப்பட்டவர்கள் உடலுக்கு நெல்லை சென்று இறுதி மரியாதையும் செலுத்தி வந்தார்.

