மாணிக்கவேல்: சிலை கடத்தலில் இரு அமைச்சர்களுக்கு தொடர்பு

மாணிக்கவேல்: சிலை கடத்தலில் இரு அமைச்சர்களுக்கு தொடர்பு

2 mins read

சென்னை: சிலைக் கடத்தல் சம்பவங்களில் தமிழகத்தின் இரு அமைச்சர்களுக்குத் தொடர்பிருப்பதாக சென்னை உயர்நீதிமன்றத் தில் பொன் மாணிக்கவேல் தரப்பில் நேற்று குற்றம்சாட்டப்பட்டது.

இந்தக் குற்றச்சாட்டைத் தொடர்ந்து அதுபற்றிய ஆதாரங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறு நீதிபதி உத்தரவிட்டார்.

சிலை கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டு, பணி இைடநீக்கம் செய்யப்பட்ட துணை போலிஸ் சூப்பிரண்டு காதர் பாட்ஷா, உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கு தொடர்பாக அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், "சிலை கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளியான தீனதயாளனை தப்பிக்க வைப்பதற்காக அவருடன் கூட்டு சேர்ந்து, என்னைப் பழிவாங்கும் நோக்கத்தில் என் மீது முன்னாள் ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் பொய் வழக்குகளைப் பதிவு செய்தார். அவர் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி என்னைத் துன்புறுத்தினார். எனவே அவர்மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்," என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது.

பொன் மாணிக்கவேல் தரப்பில் முன்னிலையான மூத்த வழக்கறிஞர் செல்வராஜ் வாதிடுகையில், "சிலை கடத்தல் தொடர்பாக இந்த உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவைத் தமிழக அரசு அமல்படுத்தவில்லை. இதையடுத்து அரசுக்கு எதிராக பொன் மாணிக்கவேல் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தாக்கல் செய்துள்ளார். அதில் சிலை கடத்தல் சம்பவத்தில் தமிழக அமைச்சர்கள் இருவருக்கு தொடர்புள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்," என்று கூறினார்.

அத்துடன் இவ்வழக்கில் பொன் மாணிக்கவேலை ஒரு மனுதாரராக சேர்க்கவேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.

அவரது வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி, இந்த வழக்கில் பொன் மாணிக்கவேலை ஒரு மனுதாரராக சேர்த்துக்கொள்வதாகவும் சிலை கடத்தலில் அமைச்சர் களுக்குத் தொடர்பிருந்தால் அதுதொடர்பான ஆதாரங்களுடன் பதில் மனுவைத் தாக்கல் செய்யவும் நீதிபதி உத்தரவிட்டார்.