நாகை: வெளிநாடுகளில் இைசயுடன் வாழ்த்து கூறும் பிறந்தநாள் வாழ்த்து மடல்கள் பிரபலமாகி உள்ளன. இந்த வாழ்த்து மடல்களைத் திறந்தால் பாடல் ஒலிக்கும், இசை இழையோடும். இதுபோன்ற படைப்பாக்கத்துடன் திருக்குறள் புத்தகத்தை வடிவமைத்துள்ளார் சமூக ஆர்வலர் ஒருவர்.
நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் உள்ள புத்தக நிலையத்தில் தமிழ் ஆர்வலர் நமச்சிவாயம் அந்த திருக்குறள் புத்தகத்தைக் காட்சிப்படுத்தியுள்ளார்.
இந்த புத்தகம் பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட அனைவரையும் வெகுவாக ஈர்த்து வருகிறது.
இந்த புத்தகத்தின் மீது கையை வைத்தால் திருக்குறள் இசை வடிவில் ஒலித்து, அதற்கான விளக்கமும் அளிக்கிறது. பள்ளி மாணவர்கள் உள்பட அனைவரையும் இது வெகுவாக ஈர்த்து வருகிறது.
வேதாரண்யத்தைச் சேர்ந்தவர் மறைக்காடர் தேசிகர். இவரது மகன் மணி என்கிற சுப்பிரமணியன் (52). இவர் தற்போது 'ஸ்கை' என்ற பெயரில் கைபேசி பழுது நீக்கும் மையத்தை நடத்திவருகிறார்.
தந்தையைப்போலவே தேவாரம் கற்றுள்ள இவருக்கு, திருக்குறள் போன்ற படைப்புகளை நவீன வடிவில் மாணவர்களிடையே கொண்டு சேர்ப்பதில் ஆர்வம் அதிகம்.
அவ்வகையில், பழுதடைந்த வானொலி, தொலைக்காட்சிப் பெட்டிகளில் பயன்படுத்தப்பட்ட தொழில்நுட்பப் பாகங்களைப் பயன்படுத்தி மின்சாரம் அல்லது பேட்டரியில் இயங்கும் ஒரு சாதனத்தை வடிவமைத்துள்ளார்.
அதன்படி, புத்தகம் போன்ற தோற்றத்தில் வடிவமைக்கப்பட்ட அதன் உலோகத் தகட்டின் மீது கை அல்லது விரலை வைத்தால் மொத்தமுள்ள 1,330 திருக்குறளும் ஒவ்வொன்றாக இசைப்பாடல் வடிவில் ஒலிக்கும். பின்னர் அதற்கான விளக்கமும் அளிக்கப்படுகிறது.
wஏற்கெனவே ஒலிப்பேழைகளில் வெளிவந்த பாடல்கள், விளக்கத்தைப் பதிவிறக்கம் செய்து மற்றவர்களை ஈர்க்கும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
அத்துடன் கை வைத்தால் ஒரு குறளும் அதற்கான விளக்கமும் வருவது மாணவர்களை வெகுவாக ஈர்ப்பதாக அமைந்துள்ளது.

