சென்னை: கடந்த சில தினங்களுக்கு முன்னர் சென்னையில் கல்லூரி மாணவர்கள் சிலர் சாலையில் கத்தியுடன் மோதிக்கொண்டனர். 'ரூட் தல' என்ற கலாசாரத்தால் இந்தச் சம்பவம் நடந்ததாகத் தெரியவந்ததால் இதை ஒழிக்கும் பணியில் சென்னை காவல்துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.
சென்னையில் 'ரூட் தல' பிரச்சினையில் போலிசாரால் கைது செய்யப்பட்ட மாணவர்கள் நேற்று காவல்நிலையத்தில் உறுதிமொழி எடுத்துக்கொண்ட நிகழ்வு இணையத்தில் பரவி வருகிறது.
"இனி எந்தத் தவறும் செய்யமாட்டோம்," என்று 'ரூட் தல' மாணவர்கள் 90 பேர் பத்திரம் எழுதிக்கொடுத்து உறுதிமொழி எடுத்துள்ளதாக சென்னை கிழக்கு மண்டல இணை ஆணையர் சுதாகர் கூறியுள்ளார்.
மேலும் மாணவர்கள் ஆயுதம் ஏந்தினால் கல்லூரியில் இருந்து நிரந்தரமாக நீக்கப்படுவார்கள் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
"கையில் ஆயுதம் ஏந்தி பொது அமைதிக்குப் பங்கம் ஏற்படுத்தும் மாணவர்களின் மோசமான செயல்பாட்டை இனிமேலும் அனுமதிக்க முடியாது. இதுபோன்ற மாணவர்களை கல்லூரியில் இருந்து நிரந்தரமாக நீக்குவதற்கு முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
"இதற்காக கல்லூரி விதிமுறைகளிலும் மாற்றம் கொண்டுவர முதல்வர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
"ஒவ்வொரு கல்லூரியிலும் மாணவர்களின் செயல்பாட்டைக் கண்காணிப்பதற்காக ஒரு குழு அமைக்கப்பட உள்ளது.
"மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும் இடையே நல்லுறவை ஏற்படுத்தும் வகையில், போக்குவரத்தை சரிசெய்யும் பணிகளில் மாணவர்களை ஈடுபடுத்த இருக்கிறோம்," என்றார் சுதாகர்.
ஒரு குறிப்பிட்ட பேருந்து பாதையைக் கட்டுப்படுத்தும் மாணவர்களை 'ரூட் தல' என்று அழைப்பர். சென்னையில் இப்படி 90க்கும் அதிகமான 'ரூட் தல' மாணவர்கள் உள்ளனர்.
பேருந்தில் கல்லூரி செல்லும் மாணவர்களிடையே யார் ஒரு குறிப்பிட்ட பாதையைக் கட்டுப்படுத்துவது என்பதன் தொடர்பில் மோதல் போக்கு நிலவிவருகிறது.

