தூத்துக்குடி: தூத்துக்குடியில் இருந்து மைசூரை நோக்கிச் சென்றுகொண்டிருந்த மைசூர் விரைவு ரயிலை திண்டுக்கல் மாவட்டம் எரியோடு அருகே காவி வேட்டியைக் கழற்றிக்காட்டி நிறுத்திவிட்ட சோதிடர் ஒருவரை ரயில்வே போலிஸ் கைது செய்து இருக்கிறது.
தண்டவாளத்தில் நின்றபடி காவி வேட்டியை அசைத்து அசைத்துக் காட்டியதைப் பார்த்த விரைவு ரயில் ஓட்டுநர்கள், ரயிலை பாதி வழியிலேயே நிறுத்திவிட்டார்கள்.
அந்தச் சோதிடர் சரியான பதில் சொல்லாததால் அவரை அதே ரயிலில் ஏற்றிக்கொண்டு ஓட்டுநர்கள் கரூர் மாவட்டம் வெள்ளியனை ரயில் நிலையத்தில் அவரை போலிசாரிடம் ஒப்படைத்தனர். போலிஸ் அவரை விசாரித்தபோது வன்னிகுமார் என்ற அந்தச் சோதிடர் பல விவரங்களைத் தெரிவித்தார்.
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தைச் சேர்ந்த வன்னிகுமார், நண்பரைப் பார்க்க எரியோடு சென்றபோது அங்கு அடையாளம் தெரியாத சிலர் அவரைத் தாக்கி கைபேசி, பணம், கார் ஆகியவற்றைப் பறித்துக்கொண்டனர். உயிரைக் காக்க ஓடிய சோதிடர், என்ன செய்வதென்று தெரியாமல் வழியில் வந்துகொண்டிருந்த ரயிலை தான் கட்டியிருந்த வேட்டியை அவிழ்த்துக் காட்டி நிறுத்திவிட்டார்.
போலிசிடம் இப்படி தெரிவித்த வன்னிகுமாரை ரயில்வே போலிஸ் உடனடியாகக் கைதுசெய்தது.
அவர் மீது வழக்குப் பதியப்பட்டது.
பின்னர் வன்னிகுமார் பிணையில் விடுவிக்கப்பட்டார் என்று தெரிவிக்கப்பட்டது.

