தேவகோட்டை: சுற்றுலா செல்வது போல் திருட்டில் ஈடுபட்டு வந்த வெளிமாநிலங்களைச் சேர்ந்த நால்வரை சிவகங்கை போலிசார் கைது செய்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் 200க்கும் மேற்பட்ட திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட இவர்களை போலிசார், கடந்த 2 ஆண்டுகளாக தேடி வந்தனர்.
அண்மையில் சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையில் வணிக வளாகம், நகைப்பட்டறை, மருந்தகம், ஐஸ் நிறுவனம், டீக்கடை, காரைக்குடி அரிசிக்கடை உள்ளிட்ட இடங்களில் கடந்த ஒரு வாரகாலமாக நடந்த திருட்டுச் சம்பவங்கள் அரங்கேறின.
இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பகுதி வியாபாரிகள், மக்கள் போலிசில் புகார் அளித்தனர்.
இதையடுத்து மாவட்ட எஸ்பி ரோஹித்நாதன் உத்தரவின்பேரில் தேவகோட்டை எஸ்ஐ மீனாட்சி சுந்தரம் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
வணிக வளாகத்தில் நடந்த திருட்டு சம்பவம் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. அதன் அடிப்படையில் தீவிர விசாரணை நடத்தியதில், திருட்டில் ஈடுபட்டது வெளிமாநிலத்தைச் சேர்ந்த கொள்ளைக் கும்பல் என்பது தெரிய வந்தது.
மேலும் காரைக்குடி 100 அடி ரோட்டில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் திருடர்கள் தங்கியிருப்பதாகப் போலிசுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
உடனடியாக அங்குச் சென்று சோதனை நடத்திய போலிசார் அறையில் தங்கி இருந்த கர்நாடக மாநிலம் மாசால் ராம் நகரைச் சேர்ந்த விஜயகுமார் மாலிக் (41), கணேஷ் மாலிக் (39), அசோக்மால் ஜெயின் (46), ராஜஸ்தான் மாநிலம் ஊல்தடியைச் சேர்ந்த சோஹைல் குலாப் பட்டான் (21) ஆகியோரைக் கைது செய்தனர்.
மேலும் அவர்களிடமிருந்து ரூ.70 ஆயிரம் மற்றும் திருடுவதற்கு அவர்கள் பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து கூறிய போலிசார், இவர்கள் ஏற்கெனவே பல்வேறு குற்றச் சம்பவங்களில் சிக்கி கைதாகி சிறையில் இருந்த போது நண்பர்களாகி உள்ளனர்.
காரில் ஊர் சுற்றும் இவர்கள், ஏதாவது ஓர் ஊருக்குச் சென்று பகலில் நோட்டமிடுவது வழக்கம். பின் அங்குள்ள விடுதி ஒன்றில் தங்கி, இரவில் ஊருக்குள் சென்று திருடுவது என்பதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.
பணம், நகைகளைத் தவிர வேறு பொருட்களைத் திருடுவது கிடை யாது.
காரைக்குடி, தேவகோட்டை பகுதிகளில் திருடிய நிலையில், காரைக்குடி விடுதியில் இருந்து வேறு ஊருக்குச் செல்லத் திட்டமிட்ட போது சிக்கினர்," என்று கூறினர்.

