சென்னை: கேரளாவை ஒட்டியுள்ள தமிழக எல்லைக்குள் மாவோயிஸ்டுகள் ஊடுருவியுள்ளதாக மத்திய உளவுத் துறையினருக்குக் கிடைத்த தகவலையடுத்து போலிசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
கேரள மாநிலத்துக்குள் தற்போது முகாமிட்டுள்ள மாவோயிஸ்டுகள் இம்மாத கடைசி வாரத்தில், தமிழக எல்லைக்குள் தங்களது குழுவிலிருந்து உயிர் நீத்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மாவீரர் தினத்தைக் கொண்டாட உள்ளதாகவும் இதன் காரணமாக தமிழகம், கேரளா, கர்நாடக மாநிலங்களைச் சேர்ந்த மாவோயிஸ்டுகள் தமிழக எல்லைக்குள் குவிய உள்ளதாகவும் மத்திய உளவுத் துறையினருக்குத் தகவல் கிடைத்தது.
அதைத் தொடர்ந்து 3 மாநில போலிசாரும் விழிப்புநிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.
மேற்கு மண்டல காவல் துறை தலைவர் பெரியய்யா, அதிரடிப்படை காவல் கண்காணிப்பாளர் மூர்த்தி, நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கலைச்செல்வன் உள்ளிட்டோருடன் 6 குழுக்கள் அடங்கிய அதிரடிப் படையினர் கடந்த செவ்வாய்க்கிழமை தமிழக - கேரள எல்லையோரப் பகுதிகளுக்குள் நுழைந்தனர்.
அவர்கள் அங்குத் தொடர்ந்து நடத்திய தேடுதல் வேட்டையில் மாவோயிஸ்டுகள் பற்றிய எவ்வித தகவலும் கிடைக்கவில்லை.
இந்நிலையில் கர்நாடக மாநிலத்திலிருந்து கிடைத்த தகவலின்பேரில் இது வதந்தி என்பது தெரியவந்தது.
இதையடுத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட ஒரு போலிிஸ் குழுவினர் மட்டும் வியாழக்கிழமை இரவு உதகைக்குத் திரும்பிவிட்டனர். இருப்பினும் எதிர்பாராத சம்பவங்கள் ஏதாவது நடக்கலாம் என உளவுத் துறையிடமிருந்து கிடைத்த தகவலின் பேரில், வரும் ஆகஸ்ட் 4ஆம் தேதி வரை கேரளா, கர்நாடக, தமிழக எல்லைகளை உள்ளடக்கிய பகுதிகளில் 5 குழுக்கள் தீவிர தேடுதல் வேட்டையிலும் கண்காணிப்புப் பணியிலும் ஈடுபட உள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.

