லாரி மீது கார் மோதிய விபத்தில் ஐவர் பலி

லாரி மீது கார் மோதிய விபத்தில் ஐவர் பலி

1 mins read

கோயம்புத்தூர்: கோவை மாவட்டம் சூலூர் அருகே சரக்கு லாரி மீது கார் மோதிய விபத்தில், காரில் பயணித்த 5 பேரும் உயிரிழந்தனர்.

காகிதக் கழிவுகளை ஏற்றிக் கொண்டு விளாங்குறிச்சியில் இருந்து பொள்ளாச்சி நோக்கி சென்ற சரக்கு லாரி மீது கோவை மாவட்டம் சூலூர் அருகே பட்டணம் புதூர் பகுதியில் எதிரே அதிவேகத்தில் வந்த வேகன் ஆர் கார் மோதியுள்ளது.

மோதிய வேகத்தில் காரின் முன்பக்கம் முழுமையாக சிதைந்து சாலையோர பள்ளத்தில் சரிந்தது.

காரின் ஓட்டுநர் முகமது பஷீர் என்பவரும் முன்னிருக்கையில் அமர்ந்திருந்த மற்றொரு பெண்ணும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலும் மற்றொருவர் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையிலும் உயிரிழந்தனர்.

அதிகாலை 5 மணியளவில், எதிரே அதிவேகத்தில் வந்த கார் திடீரென வலதுபக்கம் ஏறி லாரி மீது மோதியதாக, லாரி் ஓட்டுநர் சதீஷ்குமார் தெரிவித்துள்ளார்.

காரில் பயணித்த 5 பேரில், காரை ஓட்டிவந்த முகமது பஷீர் கட்டட ஒப்பந்ததாரர் எனவும் மற்ற 4 பேரும் வேறு மாநிலத்தவர் போல் இருப்பதால், அவர்கள் யார் எந்த ஊரைச் சேர்ந்தவர்கள் என்ற விவரம் வெளியாகவில்லை.

இதனிடையே இந்த விபத்தை போவோர், வருவோர் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தபோது, இரண்டு இருசக்கர வாகனங்கள் மோதியதில் இரண்டு பேர் காயமடைந்தனர், அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.