60 ஏக்கர் ஏரியை கண்டுபிடிக்க முடியாமல் திணறிய அதிகாரி

60 ஏக்கர் ஏரியை கண்டுபிடிக்க முடியாமல் திணறிய அதிகாரி

1 mins read

கடலூர்: கிராம நிர்வாக அலுவலர் ஒருவர் மூன்று நாட்களாக தேடியும் 60 ஏக்கர் ஏரியைக் கண்டுபிடிக்க முடியாமல் திணறிய நிலையில், அந்த இடம் விவசாய நிலமாக மாறி யது கண்டறியப்பட்டுள்ளது.

நீர்நிலைகளைக் கண்டு அறிந்து அவற்றைப் பாதுகாக்கும்படி அந்தந்த மாவட்ட ஆட்சியர்களுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.

இதன் அடிப்படையில் கடலூர் மாவட்டம் சி.என்.பாளையம் எனும் கிராமத்தில் அரசு ஆவணங்களில் 60 ஏக்கரில் இடம்பெற்றுள்ள பாளையம் ஏரி காணமல் போனது தெரியவந்தது.

அந்த கிராமத்தின் நிர்வாக அலுவலர் சுமார் 3 நாட்களாக தேடியும் ஏரியைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்நிலையில், துணைஆட்சியர் கே.எம்.சரயூ, தாசில்தார் செல்வகுமார், வருவாய்த்துறை அதிகாரிகள், போலிசார் அப்பகுதியை கடந்த வியாழக்கிழமை தீவிரமாக சோதனை செய்தனர்.

அப்போதுதான் கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பே அந்த ஏரி காணாமல் போனதும் அங்கு அக்கிராமத்தினர் விவசாயம் செய்து வருவதும் தெரிய வந்தது. விவசாய நிலமாக மாறியிருந்த அந்த ஏரியின் 60 ஏக்கர் நிலப்பரப்பில் 40 ஏக்கரில் நெல் மற்றும் 20 ஏக்கரில் கரும்பு ஆகியன பயிரிடப்பட்டிருந்தது.

இதையடுத்து விவசாயிகளி டம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆகஸ்ட் 15ஆம் தேதி வரை கெடு விதிக்கப்பட்ட நிலையில், அறுவடை முடிந்ததும் ஏரி இருந்த அந்த இடத்தை விட்டுத்தருவதாக விவசாயிகள் உறுதியளித்தனர்.