சென்னை: ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி அரசு மருத்துவர்கள் இன்று முதல் ஒரு மாதம் தொடர் போராட்டங்களில் ஈடுபடப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் சில மருத்துவர்கள் இதன் தொடர்பில் நேற்று கூட்டாக பல அறிவிப்புகளை விடுத்தனர். அதன்படி, ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி இன்று முதல் தமிழகம் முழுவதும் அரசு மருத்துவர்கள் ஒத்துழையாமை இயக்கத்தில் ஈடுபடுவர்.
அரசு நடத்தும் எந்த அலுவல் சார்ந்த கூட்டத்திலும் மருத்துவர்கள் பங்கேற்கமாட்டார்கள். ஆகஸ்ட் 9ஆம் தேதி முதல் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை மருத்துவர்கள் செயல் படுத்த மாட்டார்கள்.
இருந்தாலும் நோயாளிகளின் இலவச சிகிச்சைகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளப்படும்.
பிறகு, ஆகஸ்ட் 20ஆம் தேதி தமிழகம் முழுவதும் அரசு மருத்துவர்களும் அவர்களின் குடும்பத்தினரும் பங்கேற்கும் மாபெரும் மனிதச் சங்கிலி போராட்டம் நடக்கும்.
அதற்குப் பிறகும் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் ஆகஸ்ட் 23ஆம் தேதி முதல் சென்னையில் அரசு மருத்துவர்கள் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்குவர்.
கடைசியாக, ஆகஸ்ட் 27ஆம் தேதி தமிழகம் முழுவதும் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் நடக்கும் என்று நான்கு மருத்துவர்கள் கூட்டாக செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.

