ஸ்டாலின்: கர்நாடகம் போல அதிமுக அரசாங்கம் கவிழும்

ஸ்டாலின்: கர்நாடகம் போல அதிமுக அரசாங்கம் கவிழும்

2 mins read

வேலூர்: பிரதமர் மோடி நினைத்தால் கர்நாடகத்தைப்போல தமிழகத்திலும் அதிமுக ஆட்சி இன்னும் ஒரு மாதத்தில் கவிழ்ந்துவிடும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் வேலூரில் ஒரு பிரசாரக் கூட்டத்தில் தெரிவித்தார்.

அவருடைய இந்தக் கருத்து அதிமுக வட்டாரத்தில் பெரும் அச்சத்தையும் பரபரப்பையும் கிளப்பிவிட்டு இருக்கிறது என்று கூறப்படுகிறது.

ஸ்டாலின் ஆயிரம் அவதாரங்கள் எடுத்தாலும் அதிமுகவை தொடக்கூட முடியாது என்று அந்தக் கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி பேசிவரும் நிலையில், தமிழகத்தில் விரைவில் ஆட்சி கவிழும் என்று ஸ்டாலின் சவால்விடுத்து இருப்பது பல சிந்தனைகளைக் கிளப்பிவிட்டுள்ளது.

"மோடி நினைத்தால் ஒரே நாளில் ஆட்சி மாறும்; மாறக்கூடாது என அதிமுகவினர் மோடி காலிலேயே விழுந்து கிடக்கின்றனர். நிச்சயம் இந்த ஆட்சி கவிழப்போகிறதா இல்லையா என பொறுத்திருந்து பாருங்கள். கர்நாடகாவைப் போல் விரைவில் தமிழகத்திலும் ஆட்சி கவிழும். இனி தமிழக அரசியலில் நடக்கப்போகும் செயல்களைப் பொறுத்திருந்து பாருங்கள்," என்று ஸ்டாலின் பேசினார்.

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலை அடுத்து மத்தியில் பாஜக அரசாங்கத்துக்கு எந்த கட்சியின் ஆதரவும் தேவையில்லாத ஒரு நிலை ஏற்பட்டு உள்ளது. இருந்தாலும் பாஜக, திமுகவை அரவணைத்துச் செல்லும் போக்கை கைக்கொண்டு வருவதாக அதிமுகவினரே கூறுகிறார்கள்.

இந்த நிலையில், பிரதமர் முடிவு செய்தால் அதிமுக ஆட்சி போய்விடும் என்றும் அது முடியாத காரியம் அல்ல என்றும் ஸ்டாலின் பேசியிருப்பது தமிழக அரசியலில் மிக முக்கியமான திருப்பம் என்று கவனிப்பாளர்கள் கருதுகிறார்கள்.

அதிமுகவில் எல்லாமே அமைச்சர்களுக்கும் எம்எல்ஏக்களுக்கும் மட்டும்தானா என்று அதிருப்தி குரல் ஓங்கி வருவதாகவும் அந்த வாய்ப்பைத் திறம்பட பயன்படுத்திக்கொள்ள ஸ்டாலின் திட்டமிடுவதாகவும் ஒரு தரப்பினர் பேசி வருகிறார்கள்.

முதல்வர் பழனிசாமிக்கும் ஓ. பன்னீர்செல்வத்துக்கும் இடையில் பிரச்சினை இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், செந்தில் பாலாஜி, தங்க தமிழ்ச்செல்வனைத் தொடர்ந்து அதிமுகவின் மிக முக்கிய புள்ளியான மைத்ரேயனும் திமுகவில் சேர்ந்துவிடுவார் என்றும் பேச்சு அடிபடுகிறது.

விரைவில் அவர் தன்னுடைய ஆதரவாளர்களுடன் திமுகவில் ஐக்கியமாவார் என்று நம்பகமான தரப்புகள் தெரிவிக்கின்றன.

அதிமுக ஆட்சி கவிழும் என்று ஸ்டாலின் சொல்வதை வைத்துப் பார்த்தால், காங்கிரசை முற்றிலும் கழற்றிவிட்டுவிட்டு பாஜக பக்கம் தன் தோழமைப் பார்வையைத் திமுக திருப்பக்கூடும் என்றும் இதற்குக் கைமாறாக அதிமுக ஆட்சி அகலக்கூடும் என்றும் அனுமானிக்கப்படுகிறது.