பணிமனையில் பேருந்து மோதி சுவர் இடிந்து ஊழியர்கள் பலி

பணிமனையில் பேருந்து மோதி சுவர் இடிந்து ஊழியர்கள் பலி

1 mins read

சென்னை: சென்னை வடபழனி பேருந்து நிலைய பணிமனையின் சுவரில் பேருந்து மோதியதில், சுவர் இடிந்து விழுந்து போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் இரண்டு பேர் உயிரிழந்தனர். ஐவர் படுகாயம் அடைந்தனர்.

இந்த விபத்து சனிக்கிழமை பின்னிரவு நேரத்தில் நிகழ்ந்தது. நேற்று பொழுது விடிந்ததுமே போக்குவரத்து ஊழியர்கள் பணிமனையில் ஓய்வறை கட்டித்தருதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் பல பேருந்துகள் இயங்காமல் மக்கள் பெரும் சங்கடத்துக்கு ஆளானார்கள். பிறகு பேருந்துகள் இயங்கியதாகத் தெரிவிக்கப்பட்டது.

ஊழியர்கள் பணிகளை முடித்துவிட்டு நள்ளிரவில் ஓய்வாக அமர்ந்திருந்தபோது பணிமனைக்குள் வந்த அரசுப் பேருந்து ஒன்று கட்டுப்பாட்டை இழந்து அவர்கள் அமர்ந்திருந்த இடத்தின் அருகில் உள்ள சுவரின் மீது மோதியதாக தெரிவிக்கப்பட்டது.

இதனிடையே, காயம் அடைந்து சிகிச்சை பெற்றுவருபவர்களை சந்தித்து ஆறுதல் கூறிய போக்குவரத்துத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், பாதிக்கப்பட்டவர்களுக்குக் கூடுதல் நிதி உதவி கிடைக்கும் என்றார். சென்னையிலுள்ள 32 போக்குவரத்துப் பணிமனைகளில் 16 பணிமனைகளைப் புதுப்பிக்க திட்டம் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.