வேலூர்: வேலூரில் அடுத்த மாதம் 5ஆம் தேதி நாடாளுமன்றத்திற்குத் தேர்தல் நடக்கிறது என்றாலும் அங்கு தேசிய கட்சிகளைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு அதிமுக, திமுக ஆகிய மாநில கட்சிகள் மும்முர பிரசாரத்தை மேற்கொண்டு வருவதாகத் தெரிகிறது.
கடந்த ஏப்ரலில் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஒரே ஒரு தொகுதியைத் தவிர எல்லா தொகுதிகளையும் திமுக கூட்டணி கைப்பற்றிவிட்ட நிலையில், வேலூரில் அந்தக் கட்சியைத் தோற்கடித்துவிட்டால்தான் தலை நிமிர்ந்துவிடலாம் என்று அதிமுக கணக்குப் போடுகிறது.
அதேவேளையில், வேலூர் தொகுதியில் திமுகவுக்குத் தோல்வி ஏற்பட்டுவிட்டால் அதனால் மத்தியிலும் மாநிலத்திலும் அந்தக் கட்சி பல பிரச்சினைகளைச் சமாளிக்க வேண்டி இருக்கும் என்று அரசியல் கவனிப்பாளர்கள் கூறுகிறார்கள்.
அடுத்ததாக உள்ளாட்சித் தேர்தல் வரவிருப்பதால் வேலூர் வெற்றி தங்களுக்கு மிக முக்கியமான ஒன்று என்று இந்த இரண்டு கட்சிகளுமே கருதுகின்றன.
இந்த நிலையில், வேலூர் தொகுதியை எப்படியும் பிடித்துவிட வேண்டும் என்று இரண்டு கட்சிகளுமே மும்முரமாக வாக்கு வேட்டையைத் தொடங்கி இருக்கின்றன.
இப்போது வேலூரில் திமுக வேட்பாளர் கதிர்ஆனந்த், அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி. சண்முகம் ஆகியோர் உள்ளிட்ட 28 பேர் போட்டியிடுகிறார்கள்.
திமுக தலைவர் ஸ்டாலின், கிராமம் கிராமமாகச் சென்று மக்களை நேரடியாகச் சந்தித்து மரத்தடி, பெட்டிக்கடையில் அமர்ந்து பொதுமக்களிடம் குறைகளை நேரடியாகக் கேட்டறிந்தார். அதேபோல அதிமுக தலைவர்களும் களத்தில் குதித்து இருக்கிறார்கள்.
வாக்கு வேட்டையாடும் கட்சிகள் வினோதமான பல வழிகளையும் பின்பற்றுகின்றன.
பொள்ளாச்சியில் இருந்து வந்த திமுக தொண்டரான ராஜேந்திரன் என்ற கிளிசோதிடர் மூலம் வாக்காளர்களைக் கிளியிடம் சோதிடம் கேட்கவைத்து திமுகவினர் வாக்கு வேட்டையாடினார்கள்.
பெண்கள் போட்டிபோட்டுக்கொண்டு கிளிசோதிடம் பார்த்ததால் பெர்ணாம்பட்டு கடைத்தெரு எங்கும் ஒரே பரபரப்பானது என்று நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.

