அரவக்குறிச்சி: இரண்டு ஆண்டு காலமாக தான் காதலித்து வந்து ஒரு பெண்ணை நகைக்காக கொலை செய்த ஆடவர் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டார். இந்தச் சம்பவம் பற்றி போலிஸ் பல விவரங்களைத் தெரிவித்தது.
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே கடந்த 20ஆம் தேதி பெண் ஒருவர் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்ததைக் கண்ட போலிஸ், அந்தப் பெண் தர்மபுரி மாவட்டம், அரூர் மல்லூத்துப் பகுதியைச் சேர்ந்த தனலட்சுமி என்பதைக் கண்டறிந்தது. கொலை தொடர்பில் ஊத்தங்கரையை அடுத்த அத்திவாடியைச் சேர்ந்த மோகன் என்பவர் கைதானார்.
மோகன்-தனலட்சுமி இருவரும் இரண்டு ஆண்டுகாலமாக காதலித்து வந்தனர். இருவரும் கடந்த 20ஆம்தேதி நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம் மாரியம்மன் கோயிலுக்குப் போய்விட்டு காரில் ஊருக்குத் திரும்பி வந்தனர்.
வழியில் மோகன் தனலட்சுமியிடம் பணம், நகை கேட்டு பிரச்சினை கிளப்பினார். தனலட்சுமி மறுக்கவே அவரை முதலில் காரில் இருந்து மோகன் கீழே இறக்கிவிட்டார்.
மீண்டும் அவரை காரில் ஏற்றிக்கொண்டு தங்க நகையைக் கேட்டார். அதற்கும் தனலட்சுமி மறுக்கவே தான் மறைத்துவைத்து இருந்த கத்தியை எடுத்து தனலட்சுமியைக் குத்திக்கொன்று சாலை ஓரமாக தள்ளிவிட்டு தனலட்சுமியின் 10 பவுன் சங்கிலியுடன் மோகன் தப்பிஓடிவிட்டதாக போலிஸ் தெரிவித்தது. மோகன் இப்போது திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

