திருடனைப் பிடித்த 'வீரப் பெண்'

திருடனைப் பிடித்த 'வீரப் பெண்'

2 mins read
f8dddc34-a696-4ada-bb95-4094b5cfcc6a
திருடனிடம் தனது சங்கிலிக்காக போராடி கையில் கத்தியால் குத்துபட்ட தனலெட்சுமி (இடது) பொதுமக்களிடம் தர்ம அடி வாங்கிய திருடன் சிவக்குமார். படம்: ஊடகம் -

பூந்தமல்லி: சங்கிலித் திருடன் ஒருவன் தன்னைக் கத்தியால் குத்தியதையும் பொருட்படுத்தாமல் அவனுடன் ரத்தம் சொட்டச் சொட்ட போராடியுள்ளார் தனலெட்சுமி என்ற பூந்தமல்லி பெண்.

திருடனிடம் தனது சங்கிலியை விட்டுக்கொடுக்காமல் போராடி, திருடனையும் போலிசில் பிடித்துக்கொடுத்த தனலெட்சுமியை 'வீரப் பெண்மணி' என்று சென்னை மக்கள் பலரும் மனதாரப் பாராட்டி வருகின்றனர்.

பூந்தமல்லி சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்த தனலெட்சுமியின் தாலிச் சரடை கண்ணிமைக்கும் நேரத்தில் அறுத்துள்ளான் திருடன்.

நடப்பதை சட்டென்று சுதாரித்துக்கொண்ட லட்சுமி, அந்த திருடனைத் துரத்திச் சென்றுள்ளார்.

பூந்தமல்லியை அடுத்த காட்டுப்பாக்கம், இந்திரா நகரைச் சேர்ந்தவர் மூர்த்தி, 55.

இவருடைய மனைவி தனலட்சுமி (46). சினிமாத்துறையில் உதவியாளராகப் பணியாற்றி வருகிறார்.

ஞாயிறு இரவு தனலட்சுமி, வழக்கம்போல வேலை முடிந்து வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார்.

அப்போது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த திருடன் முகவரி கேட்பதுபோல் நடித்து திடீரென தனலட்சுமி கழுத்தில் கிடந்த 5 பவுன் தாலிச் சங்கிலியைப் பறித்துள்ளான். அப்போது இரு துண்டான சங்கிலியின் ஒரு பகுதி கொள்ளையன் கையில் சிக்கியது. மற்றொரு பகுதி தரையில் விழ அதிர்ச்சி அடைந்த தனலட்சுமி அதை எடுத்துள்ளார். உடனே கொள்ளையன் கத்தியைக் காட்டி தனலட்சுமியிடம் இருந்த சங்கிலியையும் கொடுக்கும்படி மிரட்டியுள்ளான்.

ஆனால் தரமறுத்ததால் தனலட்சுமியின் கையில் வெட்டினான். இதில் பலத்த காயமடைந்த தனலட்சுமியின் கையில் இருந்து ரத்தம் கொட்டியது.

ஆத்திரமடைந்த கொள்ளையன் தனலட்சுமியை கத்தியால் வெட்டிவிட்டு தப்பிக்க முயன்றபோது, வலியால் கத்திய தனலெட்சுமி திருடனின் கையை கெட்டியாக பிடித்துக் கொண்டார்.

அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த இளைஞர்கள் சிலர், தப்ப முயன்ற கொள்ளையனை மடக்கிப்பிடித்து தர்ம அடி கொடுத்து பூந்தமல்லி போலிசில் ஒப்படைத்தனர்.

தனலட்சுமிக்கு கையில் 5 தையல் போடப்பட்டது.

போலிஸ் விசாரணையில் திருடனின் பெயர் சிவக்குமார் என்றும் அவர் அய்யப்பன்தாங்கல் பகுதியைச் சேர்ந்தவர் என்றும் தெரியவந்தது.

அவரைக் கைது செய்த போலிசார், ஒரு களவாணிதனத்துக்குத் தேவையான கத்தி, மிளகாய்ப் பொடி, மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட எல்லா பொருட்களும் திருடனிடம் இருந்ததாகக் கூறினர்.

பத்திரிகையாளர் அடையாள அட்டையை போலியாக தயாரித்து வைத்திருந்ததும் இருசக்கர வாகனத்தில் 'பிரஸ்' என வில்லை ஒட்டிக் கொண்டு வலம் வந்ததும் தெரியவந்தது.

வழிப்பறி செய்யச் செல்லும் சிவக்குமார், அதற்கு வசதியாக அங்குள்ள தெருவிளக்குகளை அணைத்துவிடுவதும் உண்டு.

அவர் தொடர் வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததாகவும் கூறுகிறது காவல்துறை.