சென்னை: காவலர்கள் துருவித் துருவி கேள்விகளால் துளைத்தெடுத்ததால்தான் என் அம்மா பயத்தில் உயிரை மாய்த்துக்கொண்டுவிட்டார். அவரது இறப்புக்கு போலிசாரே காரணம் என்று குற்றஞ்சாட்டியுள்ளார் உயிரை விட்ட பார்வதியின் மகள் கவிதா.
எனது அம்மா அவரது உயிரை விடும் அளவுக்கு அவரை சித்திரவதை செய்துள்ள காவலர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் கவிதா வலியுறுத்தி உள்ளார்.
முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் வீட்டில் பணம், தங்கம், வைர நகைகள் உள்ளிட்டவை திருட்டுப் போன வழக்கின் தொடர்பில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட பார்வதி, 46, என்ற பெண் தனது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ப.சிதம்பரத்தின் வீட்டில் இருந்து கடந்த 2018ஆம் ஆண்டு ஜூலை மாதம் நளினி சிதம்பரத்தின் விலை உயர்ந்த பட்டுப் புடவைகள், நகைகள் ஏராளமாய் திருட்டுப்போனதாக புகார் கூறப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக ஆயிரம் விளக்கு காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இந்த புகாரின்பேரில், சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த காவல்துறையினர், சிதம்பரம் வீட்டுப் பணியாளர்கள் இருவரிடம் சந்தேகத்தின்பேரில் விசாரணை நடத்தி வந்தனர்.
விசாரணையில் ஒருவர், திருடப்பட்ட நகைகளை பார்வதியிடம் கொடுத்து வைத்திருப்பதாகக் கூற பார்வதி குடும்பத்தினரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.
அப்போது தனக்கும் அந்த திருட்டு சம்பவத்துக்கும் தொடர்பு் இல்லை என பார்வதி மறுத்து வந்ததாகக் கூறப்படுகிறது.
பார்வதியின் கணவர் சந்திரசேகர் ஆட்டோ ஓட்டுநராக உள்ளார். இவர்களுக்கு கவிதா, கமல்ராஜ் என இரு பிள்ளைகள். கவிதாவுக்கு திருமணமாகிவிட்டது.
இந்த வழக்கு குறித்து பார்வதியையும் அவரது குடும்ப உறுப்பினர்களையும் காவல்துறையினர் சுமார் மூன்று மாதங்களாக விசாரித்து வந்தனர்.
கடந்த ஞாயிறு இரவும் திருட்டு சம்பந்தமாக காவல்துறையினர் பார்வதி குடும்பத்தினரிடம் மீண்டும் விசாரணை நடத்தி உள்ளனர். அதைத்தொடர்ந்து நள்ளிரவு 1.30 மணிக்கே அவர்கள் விடுவிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதன் காரணமாக மன உளைச்சலில் பார்வதி இருந்ததாகவும் அதனால் அவர் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் எனவும் பார்வதியின் குடும்பத்தார் தெரிவித்துள்ளனர்.
போலிசாரின் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட சில மணி நேரங்களில் பார்வதி உயிர்விட்டது தி.நகரில் வசிப்போர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

