கோவை: சிறைக்கைதிகளும் தங்கள் வாழ்க்கையில் திருந்தி வாழ ஒரு வாய்ப்பு கொடுக்கவேண்டும். அவர்களது செயல்களும் சமூகத்தில் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் கைதிகள் தயாரிக்கும் உணவுப் பொருட்களை இணையம் வழி விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளதாக சிறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
கோவை மத்திய சிறையில் தண்டனைக் கைதிகள், விசாரணைக் கைதிகள் என மொத்தம் 1,850 பேர் அடைக்கப்பட்டுள்ளனர். இதுபோல் பெண்கள் தனிச்சிறையிலும் 40 கைதிகள் உள்ளனர்.
இவர்களில் நன்னடத்தையின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்ட கைதிகள் தயாரிக்கும் பொருட்களின் விற்பனையை இணையம் வழி அதிகரிக்க சிறைத்துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
காந்திபுரத்தில் மத்திய சிறைக்கு சொந்தமான இடத்தில் செயல்படும் சிறை பஜாரில் காலையில் இட்லி, தோசை, பூரி, கிச்சடி, பொங்கல் போன்ற உணவுகளும் மதியம் சாப்பாடு, தக்காளி சாதம், எலுமிச்சை சாதம், பிரியாணி, தயிர் சாதம் போன்ற உணவுகளும் இரவில் இட்லி, தோசை போன்ற உணவுகளும் தயாரித்து விற்பனை செய்யப்படுகின்றன.
இதுகுறித்து சிறைத்துறை போலிஸ் அதிகாரி கிருஷ்ணராஜ் கூறும்போது, "உணவுப்பொருட்கள் இணையம் வழி விற்பனை செய்யப்படுவது தற்போது அதிகரித்துள்ளது. இதுபோல் கைதிகள் தயாரிக்கும் உணவுப் பொருட்களையும் இணையம் வழி விற்பனை செய்யத் திட்டமிட்டுள்ளோம். இதற்காக இணைய நிறுவனங்களுடன் ஆலோசித்து வருகிறோம்," என்றார்.

