மூவர் கொலை: மகன் கைது; தாய் மருத்துவமனையில் அனுமதி

மூவர் கொலை: மகன் கைது; தாய் மருத்துவமனையில் அனுமதி

1 mins read
96013157-4f9a-47fe-9551-8056cd74a768
மூவரை கொலை செய்த கார்த்திகேயனை காவல்துறையினர் கைது செய்துள்ள நிலையில் கார்த்திகேயனின் தாயார் சீனியம்மாள் (இடது) உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். படம்: ஊடகம் -

மதுரை: திருநெல்வேலி மாவட்ட முன்னாள் மேயர் உள்பட மூவரை கொலை செய்த கார்த்திகேயனை காவல்துறையினர் கைது செய்துள்ள நிலையில் கார்த்திகேயனின் தாயார் சீனியம்மாள் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், திமுக நிர்வாகிகள் இருவரின் தூண்டுதலின் பேரிலேயே தன் மகனை போலிசார் கைது செய்துள்ளனர் என்றும் சீனியம்மாள் கூறினார்.

இதுகுறித்து மதுரையில் சீனியம்மாள் செய்தியாளர்களிடம் கூறுகையில், "முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி கொலை வழக்கின் தொடர்பில் சிபிசிஐடி விசாரணையாவது நேர்மையாக நடக்கவேண்டும். அரசியல் அழுத்தம் காரணமாகவே எங்கள் குடும்பத்தினர் மீது பழி போட்டுள்ளனர். எனது மகனை போலிசார் எங்கு வைத்துள்ளனர் என்றே தெரியவில்லை.

"என் மகனின் நிலை குறித்து தெரிவிக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுத்தாக்கல் செய்ய உள்ளோம். திரும்பவும் சொல்கிறேன், எனக்கும் உமா மகேஸ்வரிக்கும் எந்த தொடர்பும் இல்லை. அரசியல் நிகழ்ச்சிகளில் மட்டும்தான் நாங்கள் சந்தித்துப் பேசினோம்," என்று அவர் தெரிவித்தார்.

சீனியம்மாளின் கணவர் சன்னாசி கூறுகையில், "எனது மகன் கார்த்திகேயன் மீது அபாண்டமாக பழி சுமத்தப்பட்டுள்ளது. அரசியல் தூண்டுதல் காரணமாகத்தான் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். கார்த்திகேயன் நிரபராதி என்பதை சட்டப்படி நிரூபிப்போம்," என்றார்.