சென்னை: தமிழகத்தின் கரூரில் புதிய மருத்துவக் கல்லூரி மருத்துவமனை திறக்கப்பட்டுள்ளது.
தலைமைச் ெசயலகத்தில் நேற்று பல்வேறு அரசுத் திட்டங்கள் மற்றும் அரசுக் கட்டடங்களை காணொளிக் காட்சி மூலம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.
அதில் கரூர் மாவட்டம் காந்தி கிராமத்தில் கட்டப்பட்டுள்ள புதிய அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையையும் அவர் திறந்து வைத்தார்.
சுமார் 17.45 ஏக்கர் பரப்பில் 269 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது.
மேலும் 75.79 கோடி ரூபாய் மதிப்பில் 3.20 லட்சம் சதுர அடி பரப்பில் வகுப்பறை கட்டடங்களும் 122 கோடி ரூபாய் மதிப்பில் 5.58 லட்சம் சதுரஅடி பரப்பில் மருத்துவமனைக் கட்டடங்களும் கட்டப்பட்டுள்ளன.
மாணவ, மாணவியருக்கான தங்கும் விடுதி 71 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனையில் 800 படுக்கை வசதிகள் உள்ளன. ஏழாவது தளத்தில் 11 வகையான அறுவை சிகிச்சை அரங்குகளும் 200 பேர் அமரக்கூடிய அரங்கமும் அமைக்கப்பட்டுள்ளது.
மருத்துவக் கல்லூரி ஆறு மாடிகளைக் கொண்டது. 150 மாணவர்கள் பயிலக்கூடிய வகையில் மருத்துவக்கல்லூரி அமைக்கப்பட்டுள்ளது.
இன்று முதல் மருத்துவக் கல்லூரி வகுப்புகள் செயல்படத் தொடங்கும். இதே திறப்பு விழாவில் பங்கேற்ற சுகாதாரத் துறை அமைச்சர் விஜய பாஸ்கர், வரும் ஆண்டுகளில் ராமநாதபுரம், விருதுநகரில் புதிதாக அரசு மருத்துவக் கல்லூரிகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.
கடந்த 2014ஆம் ஆண்டு, சட்டமன்றக் கூட்டத் தொடரின் போது அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா கரூர் அரசு மருத்துவக் கல்லூரி குறித்து அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.

