சென்னை: தமிழக அரசு மருத்துவ மனைகளில் கர்ப்பிணி ெபண்களின் சுகப்பிரசவத்திற்காக யோகா பயிற்சி அளிக்கப்படும் என்று தமிழக சுகாதாரத் துறை செயலர் பீலா ராஜேஷ் அறிவித்துள்ளார்.
இந்தியாவின் முதல் பெண் மருத்துவரான முத்துலட்சுமி ரெட்டியை கௌரவிக்கும் வகையில் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளில் செவ்வாய்க் கிழமையன்று மருத்துவமனை தினம் கொண்டாடப்பட்டது.
கஸ்தூர்பா காந்தி அரசு மருத்துவமனையில் சுகாதாரத் துறை செயலர் டாக்டர் பீலா ராஜேஷ் தலைமையிலும் ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரியின் முதல்வர் டாக்டர் நாராயணபாபு முன்னிலையிலும் வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
அப்போது கர்ப்பிணிகளுக்கு பீலா ராஜேஷ் சீர்வரிசை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பீலா ராஜேஷ், "கர்ப்பிணிப் பெண்களுக்கு சுகப்பிரசவம் நடைபெறும் வகையில் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளில் சிறப்பு யோகா வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளது, இதற்காக யோகா பயிற்சி பெற்ற சிறப்பு மருத்துவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்," என்றார்.
"கர்ப்பிணிப் பெண்களுக்கென மென்பொருள் உருவாக்கப்பட்டு அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் கர்ப்பிணிகளுக்கு தனித்தனி எண்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன் மூலம் அவர்களுக்கு கொடுக்க வேண்டிய மருந்துகள், தேவையான பொருள்கள் அனைத்தும் முறையாக கொடுக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் எளிதில் பிறப்பு சான்றிதழ்கள் பெற முடியும்," என்றும் அவர் கூறினார். நிகழ்ச்சியில் கஸ்தூர்பா காந்தி அரசு மருத்துவமனையின் இயக்குநர் டாக்டர் விஜயா உள்ளிட்ட பல மருத்துவர்கள் கலந்துகொண் டனர்.

