ப. சிதம்பரம்: முத்தலாக் மசோதாவில் அதிமுகவின் விடுகதை

ப. சிதம்பரம்: முத்தலாக் மசோதாவில் அதிமுகவின் விடுகதை

1 mins read

சென்னை: முத்தலாக் மசோதாவை அஇஅதிமுக கட்சியினர் எதிர்த்தார்களா, ஆதரித்தார்களா என்பது விடுகதையாக உள்ளது என்று முன்னாள் நிதியமைச்சரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் கிண்டல் செய்துள்ளார்.

மக்களவையில் முத்தலாக் மசோதா தாக்கல் செய்யப்பட்டபோது அதிமுகவின் ஒரே மக்களவை உறுப்பினரான தேனி தொகுதியைச் சேர்ந்த ஓ.பி.ரவீந்திரநாத் ஆதரித்து பேசி வாக்களித்தார்.

இதனால் இஸ்லாமியர்கள் மத்தியில் அதிமுக மீது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

அதே சமயம் செவ்வாயன்று மாநிலங்களவையில் முத்தலாக் மசோதா அறிமுகப்படுத்தப்பட்டபோது நவநீதகிருஷ்ணன் மற்றும் எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன் உள்ளிட்ட அதிமுக உறுப்பினர்கள், இந்த மசோதாவின் ஒரு சில பிரிவுகளில் எங்களுக்கு உடன்பாடு இல்லை, இது உச்ச நீதிமன்றத்தால் தடை செய்யப்பட்டுள்ளது. இம்மசோதாவானது சமூகத்தில் உண்டாக்கக்கூடிய விளைவுகளையும் கருத்தில் கொண்டு நாடாளுமன்ற சிறப்புக் குழுவுக்கு அனுப்ப வேண்டும் என்று வலியுறுத்தி வாக்களிப்பில் பங்கேற்காமல் வெளிநடப்பு செய்தனர். இதனை டுவிட்டரில் சுட்டிக்காட்டிய ப. சிதம்பரம், முத்தலாக் தண்டனைச் சட்ட மசோதா செல்லாது என்று மிக விளக்கமாக மாநிலங்கள் அவையில் அஇஅதிமுக தலைவர் உரையாற்றினார். அவை உறுப்பினர்கள் அவரது உரையைப் பாராட்டினார்கள்.

மசோதா வாக்கெடுப்பின்போது அஇஅதிமுக உறுப்பினர்கள் யாரும் அவையில் இல்லை. மசோதாவை அஇஅதிமுக கட்சியினர் எதிர்த்தார்களா, ஆதரித்தார்களா என்பது விடுகதை என்று பதிவிட்டுள்ளார்.