புதுடெல்லி: தமிழகத்தை உலுக்கிய கோவை சிறுவர்களின் கொலை வழக்கு தொடர்பில் சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பையே தனது இறுதி தீர்ப்பாகக் கூறி உறுதி செய்துள்ளது டெல்லி உச்ச நீதிமன்றம்.
கடந்த 2010ஆம் ஆண்டில் கோவையில் முஸ்கான் என்ற 11 வயது சிறுமியைக் கடத்தி, பாலியல் வன்கொடுமை செய்து, கொலை செய்த வழக்கு நேற்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
அப்போது குற்றவாளிக்கு தூக்குத் தண்டனையை உறுதி செய்து உத்தரவிட்டது உச்ச நீதிமன்றம்.
இந்த தீர்ப்பின்வழி, சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு குற் றவாளிகளுக்கு எந்த கருணையும் காட்டப்படாது என்பதையும் இந்த தண்டனை பிறருக்கும் பாடமாக அமையும் என்பதையும் சுட்டிக் காட்டி, "தூக்குத் தண்டனையை உறுதிசெய்கிறோம்," என்று உச்ச நீதிமன்றம் ஒரே வாக்கியத்தில் தீர்ப்பளித்தது.
கோவையில் கடந்த 2010ல் பள்ளியில் படித்துவந்த சிறார்களான அக்கா முஸ்கான், தம்பி ரித்திக்கை கடத்திச்சென்ற குற்றவாளிகள், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தனர்.
பின்னர் சிறார்கள் இருவரையும் கொலை செய்தனர்.
தமிழகத்தையே உலுக்கிய இந்த சம்பவம் ெதாடர்பில் மோகன கிருஷ்ணன், மனோகரன் ஆகியோர் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டனர்.
இந்த இரு குற்றவாளிகளில் ஒருவரான மோகனகிருஷ்ணன் காவல்துறையிடம் இருந்து தப்பிச்செல்ல முயன்றபோது போலிசாரின் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இதை அறிந்த பொதுமக்கள் பட்டாசு வெடித்துக் கொண்டாடினர்.
தொடர்ந்து நடந்த விசாரணையில் மற்றொரு குற்றவாளியான மனோகரனுக்கு சென்னை உயர்நீதிமன்றம் தூக்குத் தண்டனை அளித்து உத்தரவிட்டது.
இதனை எதிர்த்து, மனோகரன் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது, சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவையே உறுதிசெய்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் "நாங்கள் மரண தண்டனையை உறுதி செய்கிறோம்," என்று தீர்ப்பளித்தனர்.
அத்துடன் தமிழகத்தில் அதிகளவில் சிறுவர், சிறுமிகள் மீதான வன்கொடுமை சம்பவங்கள் அரங்கேறுவது மிகுந்த வருத்தத்திற்குரியது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
இதன்மூலம் சிறுவர்கள் மீதான பாலியல் வன்கொடுமை வழக்குகளில் நீதித்துறை ஒருபோதும் இரக்கம் காட்டாது என்பது நிரூபணமாகி உள்ளதாகவும் ஊடகத் தகவல்கள் குறிப்பிட்டுள்ளன.
சம்பவத்தின் பின்னணி
கோவை ஜவுளிக்கடை உரிமையாளர் ரஞ்சித்.
இவரது குழந்தைகள் முஸ்கான், 11, ரித்திக், 8. இவர்கள் இருவரும் 2010 அக்டோபர் 29ல் கடத்தப்பட்டனர். இதில் சிறுமி முஸ்கான் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாகக் கூறப்பட்டது.
பின்னர், பொள்ளாச்சி அருகே உள்ள பிஏபி என்ற முக்கிய வாய்க்காலில் இருவரும் தள்ளிவிடப்பட்டு, கொலை செய்யப்பட்டனர்.
இந்த இரட்டைக் கொலைச் சம்பவம் தொடர்பாக குழந்தைகளை வேனில் பள்ளிக்கு அழைத்துச் சென்ற ஓட்டுநரான பொள்ளாச்சி-அங்கலக்குறிச்சியைச் சேர்ந்த மோகன கிருஷ்ணன், அதே பகுதியைச் சேர்ந்த அவரது கூட்டாளி மனோகரன் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர்.

