சென்னையில் உள்ள ஒரு ஹோட்டலின் ஊழியர்கள் தங்களை அங்கிருந்து விரட்டியடித்ததாக ஒரே பாலினக் காதல் ஜோடி குற்றம் சாட்டியுள்ளது. ஒரே பாலினக் காதலர்கள் என்கிற ஒரே காரணத்துக்காக விரட்டியடிக்கப்பட்டதாக அந்த இளம் பெண்கள் முன்வைத்த குற்றச்சாட்டை சம்பந்தப்பட்ட ஹோட்டல் மறுத்துள்ளது.
மாறாக, அந்த இரு பெண்களும் ஹோட்டலில் இருந்த மற்ற விருந்தினர்கள் முன் முகத்தைச் சுளிக்க வைக்கக்கூடிய தகாத நடவடிக்கையில் ஈடுபட்டதாக ஹோட்டல் நிர்வாகம் கூறியதாக தி இந்து நாளிதழ் தெரிவித்தது.
"நாங்கள் இருவரும் தகாத நடவடிக்கையில் ஈடுபடவில்லை. ஹோட்டலில் உள்ள மதுபானக்கூடத்தில் நடனம் ஆடிக்கொண்டிருந்த ஆண்-பெண் காதல் ஜோடிகளைப் போல நாங்களும் நடனமாடினோம். அவ்வப்போது கைகளைப் பிடித்துக்கொண்டோம், அணைத்துக்கொண்டோம். பொது இடத்தில் இருக்கிறோம் என்று நன்கு உணர்ந்து முடிந்தவரை எங்கள் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்திக்கொண்டு ஒழுங்காக இருக்க முயற்சி செய்தோம்.
"நாங்கள் கழிவறைக்குச் சென்றபோது ஹோட்டல் ஊழியர்கள் எங்களை அங்கிருந்து வெளிய வரச்சொல்லி அசிங்கப்படுத்தினர்," என்று ரசிகா கோபாலகிருஷ்ணனும் ஷிவாங்கி சிங்கும் தி நியூஸ் மினிட் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தனர். "நள்ளிரவு என்றுகூட பார்க்காமல் நாங்கள் ஹோட்டலிலிருந்து விரட்டியடிக்கப்பட்டோம்," என்றார் ஷிவாங்கி.

