வேலூர்: வேலூர் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் அதிமுகவும் திமுகவும் போட்டி போட்டுக் கொண்டு பெரும் பணத்தை வாக்காளர்களுக்கு விநியோகம் செய்து இருப்பதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அந்தத் தொகுதியில் இன்று மாலையுடன் பிரசாரம் முடிவடைகிறது. திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த், அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏசி சண்முகம் இருவர் உட்பட மொத்தம் 28 பேர் போட்டியிடுகிறார்கள்.
அந்தத் தொகுதியில் மொத்தம் 14 லட்சம் வாக்காளர்கள் இருக்கிறார்கள். அவர்களில் 80 விழுக்காட்டினருக்கு அதிமுக தரப்பில் தலா ரூ. 300 விகிதம் ரூ. 35 கோடியும் திமுக தார்பில் 70 விழுக்காட்டு வாக்காளர்களுக்குத் தலா ரூ. 200 விகிதம் ரூ. 20 கோடியும் பட்டுவாடா செய்யப்பட்டு உள்ளதாகக் கூறப்படுகிறது.
திமுக, அதிமுக இரண்டு வாக்காளர்களுமே பெரும் பணம் படைத்தவர்கள் என்பதால் கடைசி நேரத்தில் இன்னும் அதிகமாக பணம் புழங்கும் என்று கணிக்கப்படுகிறது.
இன்றுடன் பிரசாரம் முடிவடைவதால் வேலூர் தொகுதியைவிட்டு கட்சியினர் வெளியேறிவிட வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்து உள்ளது.
துணை ராணுவப் படையும் போலிசாரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு இருக்கிறார்கள். இம்மாதம் 5ஆம் தேதி அங்கு வாக்களிப்பு நடக்கிறது.
இதனிடையே, வேலூரில் பிரசாரத்தை தமிழக பாஜக தலைவர்கள் புறக்கணித்து உள்ளதாகவும் இதனால் அதிமுகவினர் கடும் அதிருப்தியடைந்து உள்ளதாகவும் கூறப்படுகிறது.
அதேவேளையில், வேலூர் தேர்தல் பிரசாரத்திற்குப் போக வேண்டாம் என பாஜக தமிழக தலைவர் தமிழிசையை அதிமுக தலைமை தடுத்துவிட்டதாகவும் பேச்சு அடிபடுகிறது.

