புதுடெல்லி: சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத் திருத்த மசோதா, வரலாற்றின் குப்பைத் தொட்டியில் வீசப்படும் என்றும் இந்தியாவை அமெரிக்க ஐக்கிய நாடுகளைப் போல 'இந்திய ஐக்கிய நாடுகள்' என்றே அழைக்க வேண்டும் என்றும் மதிமுக தலைவர் வைகோ நேற்று மாநிலங்களவையில் பேசினார்.
சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு திருத்த மசோதா மீதான விவாதம் நேற்று மாநிலங்களவையில் நடந்தது. மாநிலங்களவை உறுப்பினரான வைகோ, அந்த மசோதா தொடர்பில் ஆற்றிய முதல் உரையில் மூன்று காரணங்களுக்காக இச்சட்டத்திருத்தத்தை தான் எதிர்ப்பதாகக் குறிப்பிட்டார்.
"இந்தச் சட்டம் தனிநபர்களைக் குறிவைக்கின்றது. எந்த ஒரு தனி நபரையும் பயங்கரவாதி என்று முத்திரைக் குத்துவதற்கு மத்திய அரசுக்கு அதிகாரம் அளிக்கிறது. ஒருவரை பயங்கரவாதியாக வகைப்படுத்துவதற்கு முன்பாக, அவர் தரப்பில் எந்த விளக்கமும் அளிப்பதற்கு இந்தச் சட்டம் இடம்தரவில்லை. ஆகையால் இது ஜனநாயகத்துக்கு எதிரானது. இந்திய அரசியல் சட்டம் வழங்கி இருக்கின்ற அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது.
"காவல்துறைத் துணைக் கண்காணிப்பாளர்தான் ஒருவரை விசாரிக்க முடியும் என்ற நிலையை மாற்றி, தேசிய புலனாய்வு முகமையின் ஆய்வாளரே எவரையும் விசாரிக்க முடியும் என்று இந்தச் சட்டத் திருத்தம் கூறுகிறது.
"இச்சட்டம் சாதாரண மக்கள் மனதில் அச்சத்தை ஏற்படுத்து கிறது. இந்தச் சட்டத்தின் வாயிலாக மாநில அரசுகளின் அதிகாரத்தை மத்திய அரசு பறிக்கிறது. இந்தியா என்பது மாநிலங்களின் கூட்டு அமைப்புதான். ஆனால், 'இந்தியா ஒரே நாடு' என்ற கருத்தை இந்த அரசு திணிக்க முற்படுகின்றது. அது இந்திய ஒற்றுமைக்குக் கேடானது என்பது குறிப்பிடத்தக்கது.
"உண்மையில் இந்த நாடு, அமெரிக்க ஐக்கிய நாடுகளைப் போல 'இந்திய ஐக்கிய நாடுகள்' என்றே அழைக்கப்பட வேண்டும். ஏற்கெனவே போதிய சட்டங்கள் இருக்கின்ற நிலையில், கொண்டுவரப்பட்டுள்ள சட்டத் திருத்தம் தேவையற்றது.
எனவே சட்டவிரோத நடவடிக்கைகள் திருத்த மசோதாவை முற்றிலும் நிராகரித்து ஒதுக்கித் தள்ள வேண்டும். தவறினால் எதிர்கால இந்திய வரலாற்றில் மக்களால் இந்தச் சட்டம் குப்பைக் கூடையில் தூக்கி எறியப்படும்," என்று வைகோ பேசினார்.

