புதிய உச்சத்தைத் தொட்டது தங்கம் விலை: மேலும் ஏறும் என கணிப்பு

புதிய உச்சத்தைத் தொட்டது தங்கம் விலை: மேலும் ஏறும் என கணிப்பு

2 mins read

தொடர்ந்து அதிகரித்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று புதிய உச்சத்தைத் தொட்டது. ஆகஸ்ட் மாதம் தொடங்கியது முதலே ஒவ்வொரு நாளும் விலை ஏறியது.

ஆடிப்பெருக்கு நாளான நேற்று ஒரே நாளில் சென்னையில் தங்கத்தின் விலை 264 ரூபாய் உயர்ந்து சவரன் 27,328 ரூபாய்க்கு விற்பனை ஆனது. கிராமுக்கு 33 ரூபாய் அதிகரித்து 3,416 ரூபாய் ஆனது.

ஆகஸ்ட் 1, 2, 3 ஆகிய தேதிகளில் மட்டும் சவரன் தங்கத்தின் விலையில் 848 ரூபாய் உயர்ந்துள்ளது.

அண்மைய ஆண்டுகளில் சவரன் 27,000 ரூபாய் என்ற அளவுக்கு உயர்ந்தது இல்லை.

ஜூலை 19ஆம் தேதி 26,904 ரூபாய்க்கு தங்கம் விலை எறியபோதே தங்கம் வாங்க விரும்பியோர் அதிர்ச்சி அடைந்தனர். தற்போது மேலும் உயர்ந்து வருகிறது.

கடந்த ஜனவரியில் முதல் முறையாக ஒரு சவரன் தங்கம் 25 ஆயிரம் ரூபாயைத் தாண்டியது. பின், ஜூன் மாதம் 26 ஆயிரம் ரூபாய்க்கு மேல் முதல் முறையாக உயர்ந்தது.

ஜூன் மாதத்தில் தங்கம் விலை 900 ரூபாய்க்கு மேல் அதிகரித்தது.

தங்கத்தின் விலை தொடர்ந்து ஏறுமுகமாக இருப்பதற்கான காரணங்களை சென்னை வைரம், தங்கம் வியாபாரிகள் சங்கத் தலைவர் ஜெயந்திலால் ஷலானி விளக்கினார்.

"உலகப் பொருளியலில் அமெரிக்க டாலரின் மதிப்பு குறைந்துகொண்டே வருவது உள்ளிட்ட காரணங்களால் உலக முதலீட்டாளர்கள் தங்கத்தில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டுகின்றனர்.

"எனவே விலை உயர்வு இத்துடன் நிற்கப்வோதில்லை. வரும் நாட்களிலும் உயர்வு நிலை நீடிக்கும்," என்றார் அவர்.

சீன இறக்குமதிப் பொருட்களுக்கு அமெரிக்கா புதிதாக 10% வரிவிதித்து இருப்பதும் ஒரு காரணம் என்றார் ஷலானி.

இவ்வாண்டு தொடக்கத்தில் இருந்தே இந்தியாவில் ஆபரணத் தங்கத்தின் விலை கிட்டத்தட்ட 10 விழுக்காடு உயர்ந்துவிட்டது. அதேசமயம் ஜூன் மாதம் வரை இந்தியாவில் தங்கத்தின் தேவை 13 விழுக்காடு அதிகரித்தது.

உலகச் சந்தையிலும் தங்கத்தின் விலை ஏறி வருகிறது. சிங்கப்பூரில் நேற்று ஒரு கிராம் தங்கத்தின் விலை $61.30 முதல் $63 வரை விற்கப்பட்டது. இருப்பினும் நகைக்கடைகளில் ஆடிப்பெருக்கு திருநாளுக்கான கூட்டம் காணப்பட்டது.