வேலூர்: வேலூர் பெரிய மாவட்டம் என்பதால் அந்த மாவட்டத்தை இரண்டாகப் பிரிப்பது பற்றி தேர்தலுக்குப் பிறகு பரிசீலிக்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறி வித்தார்.
வேலூர் தொகுதியில் நாளை நாடாளுமன்றத் தேர்தல் வாக்களிப்பு நடக்கிறது. தேர்தலையொட்டி இறுதிக்கட்ட பிரசாரத்தில் வெள்ளிக்கிழமை இரவு அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி. சண்முகத்துக்கு வாக்கு வேட்டையாடிய முதல்வர், தேர்தல் நடப்பதால் இது பற்றி மேற்கொண்டு கருத்துகளைத் தெரிவிக்க இயலாது என்று கூறினார்.
வேலூரில் அதிமுகவை எதிர்த்து களம் இறங்கி இருக்கும் திமுகவை கடுமையாகத் தாக்கி பேசிய முதல்வர், மாநிலத்தில் திமுகவினர் ஒழுங்காக நடந்துகொண்டால் கொலை,கொள்ளை, திருட்டு எங்கேயும் நடக்காது என்று கூறினார். பெண்களும் பாதுகாப்பாக வாழ முடியும் என்றார் அவர்.
இந்தியாவில் திமுக மட்டும்தான் விஞ்ஞானபூர்வமாக மக்களை ஏமாற்றிவிடக் கூடிய கட்சி என்று அவர் கூறினார்.
பொய் பேசுவதில் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு நோபல் பரிசையே கொடுக்கலாம் என்றும் பழனிசாமி தெரிவித்தார்.
இதனிடையே, அனுமதியின்றி கூட்டம் நடத்தியதாக மு.க.ஸ்டாலின் உட்பட நான்கு பேர் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது.
ஆம்பூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் முக்கிய பிரமுகர்களைச் சந்தித்து ஸ்டாலின் கூட்டம் நடத்தினார்.
அனுமதி பெறாமல் அந்தக் கூட்டத்தை நடத்தியதாகவும் தேர்தல் விதிமுறைகளை மீறியதாகவும் திமுக தலைவர் உள்ளிட்ட 4 பேர் மீது போலிசிடம் ஆம்பூர் வட்டாட்சியர் புகார் அளித்ததன் பேரில் போலிஸ் அவர்கள் மீது இரு வழக்குகளைப் பதிவு செய்தது.
இவ்வேளையில், வேலூரில் மக்களவைத் தேர்தலுக்கான பிரசாரம் முடிவுற்ற நிலையில், அங்கு பல உத்தரவுகளைத் தமிழக அரசு பிறப்பித்துள்ளது.
வாக்குப்பதிவு முடிவடையும்வரை அங்கு தேர்தல் தொடர்பான எந்த கூட்டமோ ஊர்வலமோ நடத்தக்கூடாது. திரைப்படம், தொலைக்காட்சி, எஃப்எம் வானொலி, வாட்ஸ்அப், முகநூல், டுவிட்டர் அல்லது இது போன்ற சாதனம் வாயிலாக தேர்தலைப் பொதுமக்களின் பார்வைக்குக் கொண்டுசெல்லக் கூடாது என்றெல்லாம் அரசு உத்தரவிட்டுள்ளது.
வேலூ-ரில் நாளை திங்கட்கிழமை வாக்-குப்-ப-திவு நடக்-கிறது.

