மந்தாரக்குப்பம்: மளிகைக் கடை ஒன்றில் திருடவந்த திருடன் கல்லாப்பெட்டியில் பணம் இல்லாததைக் கண்டு விரக்கி அடைந்து 'உயிரை பணயம் வைத்து திருட வந்த என்னை ஏமாற்றலாமா?' என்று மளிகைக் கடைக்காரருக்கு கடிதம் எழுதி வைத்து அதிர்ச்சி கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
கடலூர் மெயின்ரோட்டில் மளிகைக் கடை நடத்திவரும் கடலூர் மாவட்டம், நெய்வேலி மந்தாரக்குப்பத்தைச் சேர்ந்த ஜெயராஜ் அன்றாட வியாபாரம் மூலம் வசூலாகும் பணத்தை வீட்டுக்கு எடுத்துச் சென்றுவிடுவார். வெள்ளிக்கிழமை காலையில் கடையைத் திறந்து பார்த்தபோது குரங்குகள் புகுந்து நாசப்படுத்தியதைப் போல் கடை இருந்ததைப் பார்த்து திடுக்கிட்டு அவர் போலிசுக்குத் தகவல் தெரிவித்தார்.
போலிஸ் வந்து பார்த்தபோது கல்லா பெட்டியில் ஒரு கடிதம் இருந்தது. "உயிரை பணயம் வைத்து திருட வந்தால், காசு இல்லாமல் கல்லாவை துடைத்து வைத்து என்னை ஏமாற்றலாமா, அதுக்குத்தான் இந்த குரங்கு வேலை," என எழுதப்பட்டிருந்தது. திருடனைப் பிடிக்க வேட்டை தொடங்கி இருக்கிறது.

