ரூ.3,600 கோடியை தந்துவிட்ட தமிழகம்

ரூ.3,600 கோடியை தந்துவிட்ட தமிழகம்

2 mins read

சென்னை: தனக்குச் சேரவேண்டிய வரியையும் மானியத் தொகையையும் மத்திய அரசாங்கம் தராமலேயே இருந்து வருகிறது என்று தமிழக அரசு அப்போதைக்கு அப்போது புகார் தெரிவித்து வருகிறது.

ஆனால் மத்திய அரசாங்கம் 2017-18ல் பல திட்டங்களுக்காக தமிழகத்துக்கு ஒதுக்கிய ரூ. 5,920.39 கோடியில் ரூ. 3,676.55 கோடியை தமிழக அரசு மத்திய அரசுக்கு திருப்பித் தந்துவிட்டது.

கணக்குத் தணிக்கை கட்டுப்பாட்டு அதிகாரி தாக்கல் செய்து இருக்கும் அறிக்கை ஒன்றின் மூலம் இது தெரியவருகிறது.

ஏழைகளுக்கும் தாழ்த்தப்பட்டவர்களுக்கும் வீடுகளைக் கட்டுவதற்கு அந்த தொகை கொடுக்கப்பட்டது. அதை தமிழக அரசு பயன்படுத்தாமல் போனதால் ஏழைகள், தாழ்த்தப்பட்டவர்களின் சமூக மேம்பாட்டிற்குத் தடை ஏற்பட்டுவிட்டது.

அந்தத் தொகை மூலம் யார் யார் நன்மை அடையவேண்டும் என்பதை அடையாளம் காண்பதில் ஏற்பட்ட தாமதமே பணத்தை தமிழக அரசு திருப்பிவிட்டதற்கான காரணம் என்று தெரியவருகிறது.

தமிழக அரசு 14வது திட்ட ஆணையத்தின் கீழ் 2017-18 நிதி ஆண்டில் ஏழு திட்டங்களுக்காக ரூ.2,243.84 கோடியைப் பயன்படுத்தி இருக்கிறது என்று அறிக்கை கூறுகிறது.

வீட்டுத் திட்டத்தின் கீழ் நலிந்த பிரிவினருக்கு போய்ச் சேரவேண்டிய ரூ. 2,354.38 கோடி தொகையை தமிழக அரசு மத்திய அரசிடம் திருப்பிக் கொடுத்து இருக்கிறது.

மொத்தம் ரூ.3,082.39 கோடியில் ரூ.728 கோடி மட்டுமே பயன்படுத்தப்பட்டு இருக்கிறது.

பஞ்சாயத்து நிர்வாகம், கிராமிய நிர்வாகம் உள்ளிட்ட அமைப்புகள் பயனீட்டாளர்களை அடையாளம் காணத் தவறியதே இந்த நிலைக்குக் காரணம் என்று அறிக்கை தெரிவிக்கிறது.

மத்திய அரசாங்கத்தின் பிரதமர் வீட்டுத் திட்டத்தின் கீழ் நன்மை பெறும் ஒவ்வொருவருக்கும் 269 சதுரஅடி வீட்டைக் கட்ட பணம் தரப்படுகிறது.

ஆனால் நலிந்த பிரிவினரைச் சேர்ந்த பலரிடத்திலும் வீடு கட்ட மனை இல்லாததால் அவர்களுக்குப் பணம் கொடுக்க முடியவில்லை என்று கூறப்படுகிறது.