சென்னை: தமிழ்நாட்டில் 10ஆம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கான முதல் இடைப்பருவத் தேர்வு கடந்த 29ஆம் தேதி தொடங்கி வெள்ளிக்கிழமை நிறைவடைந்தது.
இந்த நிலையில், பிளஸ் 2 மாணவர்களுக்கான முதல் இடைப்பருவத் தேர்வு வினாத்தாள்கள் அனைத்தும் 2 நாட்களுக்கு முன்னதாகவே வாட்ஸ்அப் மற்றும் ஷேர் இட் செயலிகள் மூலமாக முன்கூட்டியே வெளியாகியிருப்பது ஆசிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திருவாரூர் மாவட்டத்திலுள்ள பள்ளிகள் சிலவற்றில் இயற்பியல் பாடத்துக்கான தேர்வின்போது, மாணவர்கள் முன்கூட்டியே விடைகளை எழுதி வைத்திருந்ததை தேர்வு அறையில் ஆசிரியர்கள் கண்டுபிடித்தனர். அதுபற்றி மாணவர்களிடம் ஆசிரியர்கள் விசாரித்தபோது, வினாத்தாள்கள் முன்னரே வெளியானது தெரியவந்தது.
மன்னார்குடி கல்வி மாவட்ட அதிகாரி மணிவண்ணன் இதுகுறித்து கூறியபோது, "சமூக வலைதளங்கள் மூலமாக வினாத்தாள்கள் வெளியாகியுள்ளதாகக் கூறுகிறார்கள். இது பற்றி அரசின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்படும். ஷேர் இட் மற்றும் வாட்ஸ்அப் செயலிகள் மூலம் பரவிய வினாத்தாள்கள், திருவாரூர் மாவட்டத்தில் இருந்து பரவவில்லை," என்று தெரிவித்தார்.
ஏதோ ஒரு பள்ளியின் வாயிலாகவே இவ்வாறு வினாத்தாள்கள் வெளியாகி இருக்க வாய்ப்புள்ளது. அதே நேரத்தில், தேர்வுத்தாள் தயாரிக்கும் அச்சகத்தையும் ஆய்வு செய்ய வேண்டும் என்று ஓர் அரசுப் பள்ளி ஆசிரியர் கூறினார்.

