இரண்டு தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தேர்தல்

இரண்டு தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தேர்தல்

2 mins read

சென்னை: தமிழ்நாட்டில் வேலூர் நாடாளுமன்றத் தொகுதி தேர்தல் முடிந்த கையோடு அடுத்த மாதமே நாங்குனேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் இடைத்தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் தயாராகி வருகிறது.

வேலூர் தொகுதியில் இன்று நடக்கும் தேர்தலுடன் சேர்த்து இந்த இரண்டு சட்டமன்றத் தொகுதிகளிலும் தேர்தல் நடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் தேர்தல் ஆணையம் வேலூர் தொகுதிக்கு மட்டும் தேர்தலை அறிவித்தது. இந்நிலையில், இது பற்றி கருத்து தெரிவித்த தேர்தல் ஆணைய அதிகாரி, தமிழ்நாட்டில் நாங்குனேரி, விக்கிரவாண்டி தொகுதிகள் மே மற்றும் ஜூன் மாதங்களில் காலியாகிவிட்டதால் நவம்பர் மாதத்துக்குள் அங்கு இடைத்தேர்தலை நடத்திவிட வேண்டும் என்றார்.

அக்டோபர் முதல் டிசம்பர் வரை மழைக்காலம் என்பதால் அதற்கு முன்னதாக செப்டம்பர் மாதமே தேர்தலை நடத்திவிட தாங்கள் திட்டமிடுவதாக அவர் கூறினார்.

செப்டம்பர் மாதத்தில் முக்கியமான நிகழ்ச்சிகள் எதுவும் இல்லை. ஆதலால் அந்த மாதத்திலேயே இடைத்தேர்தலை நடத்திவிட தாங்கள் முடிவு செய்து இருப்பதாக வேறு ஒரு மாநில அதிகாரி தெரிவித்தார்.

நாங்குனேரி தொகுதியின் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏவாக இருந்த வசந்தகுமார், கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதியில் நின்று வெற்றி பெற்றதால் மே மாதம் 27ஆம் தேதி அவர் தனது எம்எல்ஏ பதவியைக் கைவிட்டார். இதனால் நாங்குனேரி தொகுதி காலியானது.

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதியின் திமுக எம்எல்ஏ ராதாமணி, உடல்நலக் குறைவு காரணமாக ஜூன் மாதம் 14ஆம் தேதி மரணம் அடைந்தார். இதனால் அந்தத் தொகுதியும் காலியாக இருக்கிறது.

வேலூர் பிரசாரத்தை அரசியல் கட்சிகள் இப்போதுதான் முடித்து இருக்கின்றன. அங்கு பெரும் பணத்தை அதிமுக, திமுகவினர் செலவிட்டு இருக்கிறார்கள்.

இந்த நிலையில், உடனேயே இடைத்தேர்தலும் வருவதால் அந்தக் கட்சிகள் உட்பட பல அரசியல் கட்சிகள் பல உத்திகளையும் பற்றி ஆலோசித்து வருவதாகக் கூறப்படுகிறது.

நாங்குனேரியில் திமுக களமிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அங்கு உதயநிதி ஸ்டாலின் திமுக வேட்பாளராக நிறுத்தப்படலாம் என்றும் அண்மைய காலமாக பேச்சு அடிபட்டு வருகிறது.

திமுக-காங்கிரஸ் கூட்டணி கட்சிகளுக்கு இடையே நாங்குனேரி தொகுதி தொடர்பில் ஏற்கெனவே பிரச்சினைகள் உள்ளதாக வெளியே தெரியவந்து உள்ளது.

அந்தத் தொகுதி காங்கிரஸ் தொகுதி என்றாலும் அதை அந்தக் கட்சி தங்களுக்கு விட்டுக்கொடுக்க வேண்டும் என்று திமுகவினர் கோரி வருகிறார்கள்.

காங்கிரசின் இப்போதைய இறங்குமுக நிலையைக் கருத்தில் கொண்டு பார்க்கையில், திமுகவுடன் உறவைக் கட்டிக்காக்கும் நோக்கத்தில் நாங்குனேரியை திமுகவுக்கு அந்தக் கட்சி விட்டுக்கொடுத்துவிடும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.