திருச்சி: திருச்சி பகுதிகளில் அதிகம் பால் கறக்கும் பசுமாடுகளை வாழைப்பழங்களைக் கொடுத்து கடத்திச் சென்று விற்கும் கும்பலைப் பிடிக்க போலிஸ் வேட்டையைத் தொடங்கி இருக்கிறது.
திருச்சி கருமண்டபம், பிராட்டியூர், தீரன் நகர் பகுதிகளில் ஏராளமான மக்கள் பசுமாடுகளை வளர்த்து வருகிறார்கள். அந்த மாடுகளில் பலவும் அன்றாடம் 10 லிட்டர் வரை பால் கொடுப்பவை. ரூ.50,000 வரை விலையுள்ளவை.
அண்மையில் திடீர் திடீர் என்று பல மாடுகள் காணாமல் போய்விட்டன. மாடுகளை மேய்ச்சலுக்கு அனுப்பும் உரிமையாளர்கள் மாலை நேரங்களில் மாடுகள் வீட்டிற்குத் திரும்பாததால் அதிர்ச்சி அடைந்து அது பற்றி போலிசில் புகார் தெரிவித்து இருந்தனர்.
மாடுகளை யார் திருடுகிறார்கள் என்பதைக் கண்டுபிடிக்க தீரன் நகர் பகுதியினர் தாங்களே ரகசியமாக முயற்சிகளை எடுத்து வந்தனர்.
இந்த நிலையில், தீரன்நகர் பேருந்து நிறுத்தத்தில் மாடுகளின் உரிமையாளர்கள் மறைந்து நின்று பார்த்தபோது சுமார் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் அங்கு நின்ற விலை உயர்ந்த மாட்டுக்குவாழைப்பழம் கொடுத்தார்.
மாட்டை தந்திரமாக பக்கத்தில் உள்ள கருவேல முள்காட்டுக்குள் ஓட்டிச் சென்று அங்கு மாட்டைக் கட்டிப்போட்டுவிட்டு அப்பாவியைப் போல் அவர் வெளியே வந்தார்.
உடனே உரிமையாளர்கள் அவரைப் பிடித்து உதைத்ததை அடுத்து 4 மாடுகளை முதியவர் கடத்த முயன்றது தெரியவந்தது.
அவரை போலிசில் உரிமையாளர்கள் ஒப்படைத்தனர். முதியவரிடம் விசாரணை நடக்கிறது.
வாழைப்பழத்தைக் கொடுத்து மாடுகளைக் காட்டுக்குள் அழைத்துச் சென்று கட்டிப் போட்டு விட்டு நள்ளிரவில் லாரிகளில் அவற்றை ஏற்றி கடத்திச் சென்று சந்தையில் பெரும் பணத்துக்கு விற்கும் காரியம் பல காலமாக நடந்துவந்துள்ளதாகத் தெரிகிறது.

