வேலூர் தொகுதியில் வாக்களிப்பு

வேலூர் தொகுதியில் வாக்களிப்பு

2 mins read

வேலூர்: வேலூர் நாடாளுமன்றத் தொகுதிக்கு நேற்று நடந்த வாக்குப் பதிவின்போது முக்கிய பிரமுகர்கள் முதல் பொதுமக்கள் பலரும் ஆர்வமாக வாக்களித்தனர். நேற்று மாலை இந்திய நேரம் 5 மணி நிலவரப்படி 62.94% வாக்குகள் பதிவாகியிருப்பதாக தமிழக தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

வாக்காளர்களுக்குப் பணப்்பட்டுவாடா புகார் எதிரொலி யாக வேலூர் தொகுதிக்கு மட்டும் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் இத்தொகுதியில் திமுக சார்பில் அக்கட்சியின் பொருளாளர் துரை முருகனின் மகன் கதிர் ஆனந்தும் அதிமுக கூட்டணியின் சார்பில் புதிய நீதிக் கட்சியின் தலைவர் ஏ.சி. சண்முகமும் போட்டியிடுகின்றனர்.

இவர்கள்தவிர, நாம் தமிழர் கட்சியின் சார்பில் தீபலட்சுமி போட்டியிடுகிறார்.

மொத்தம் 28 வேட்பாளர்கள் களத்தில் இருக்கின்றனர்.

கடந்த மே மாதம் நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் நடைபெற்ற போது இந்தத் தொகுதியில் மட்டும் தேர்தல் ரத்து செய்யப்பட்டது.

நேற்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவை அமைதியாகவும் சுதந்திரமாகவும் நடத்தி முடிப்பதற்காக தொகுதி முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.

பதற்றம் காணப்படும் வாக்குச்சாவடிகளில் உள்ளூர் போலிசாருடன் துணை ராணுவப்படை வீரர்களும் நிறுத்தப்பட்டனர்.

தமிழகத்தில் மொத்தமுள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளில் 38 தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் மாதம் தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டது. 37 தொகுதிகளில் திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் வெற்றி பெற்றன. தேனி தொகுதியில் மட்டும் அதிமுக வெற்றிபெற்றது.

இந்நிலையில், இத்தேர்தலில் 2 முதல் 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்று அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏ.சி. சண்முகம் கூறியுள்ளார்.

ஏ.சி.சண்முகத்துக்கும் கதிர் ஆனந்துக்கும் இடையேதான் கடும் போட்டி நிலவுகிறது.