காசு இருந்தால்தான் தண்ணீர்; தேனியில் அக்டோபர் முதல் குடிநீருக்கு கட்டணம் வசூல்

காசு இருந்தால்தான் தண்ணீர்; தேனியில் அக்டோபர் முதல் குடிநீருக்கு கட்டணம் வசூல்

2 mins read

தேனி: மதுரையைப் போன்றே காசு கொடுத்தால்தான் குடிநீர் கிடைக்கும் என்ற நிலை விரைவில் தேனி மக்களுக்கும் வரவுள்ளது.

வரும் அக்டோபர் மாதம் முதல் வீட்டு குடிநீர் கட்டணமாக மாதம் 235 ரூபாயும் வர்த்தக நிறுவனங்களுக்கு மாதம் 700 ரூபாயும் வசூலிக்கப்படும் என நகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது மக்களிடையே பெரும் அதிச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இந்த கட்டண உயர்வை வாபஸ் பெறாவிட்டால் கடுமையான போராட்டங்களை நடத்துவோம் என பொதுமக்களும் வர்த்தகர்களும் நகராட்சி நிர்வாகத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதற்கு நகராட்சி சார்பில் கொடுக்கப்பட்ட விளக்கத்தில் மிகவும் தரமான சுத்திகரிக்கப்பட்ட ஒரு லிட்டர் நீரை ஒரு காசுக்கு விநியோகிக்கிறோம் எனக் கூறி உள்ளது.

இருப்பினும் நகராட்சி நிர்வாகத்தின் இந்த விளக்கத்தை மக்கள் ஏற்க விரும்பவில்லை.

நகராட்சி குடிநீர் பிரிவு அதிகாரிகள் கூறுகையில், "தற்போது பல பேரூராட்சிகளில் மாதாந்திர குடிநீர் கட்டணம் 125 முதல் 150 ரூபாய் வரை வசூலிக்கப்படுகிறது. நாங்கள் ஒரு பைசா கட்டணம் மட்டுமே நிர்ணயித்துள்ளோம்.

"பராமரிப்பு, விநியோகப் பிரிவு பணியாளர்கள் சம்பளம், சுத்தி கரிப்பு செலவு, குடிநீர் குழாய் உடைப்புகளைச் சரிசெய்ய பராமரிப்புச் செலவு, முதலீடு, அதற்கு வட்டி என நாங்கள் கணக்கிடும்போது, தற்போது நாங்கள் நிர்ணயித்துள்ள கட்டணம் பாதி செலவிற்கு கூட போதாது. மக்களிடம் வாங்கித்தான் மக்களுக்கு சேவை செய்யமுடியும்.

மக்களிடம் வரி வாங்காமல் சேவை செய்வது நடக்கவே நடக்காத காரியம். எனவே, குடிநீர் கட்டண உயர்வை மக்கள் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும் என்று கூறினர்.

தேனி நகராட்சியின் மக்கள் தொகை ஒரு லட்சத்தை தாண்டி விட்டது. இந்நகரில் 27,000 வீடுகளும் 2,000க்கு மேற்பட்ட வர்த்தக நிறுவனங்களும் உள்ளன.

நகராட்சி நிர்வாகம் சார்பில் வீடுகளுக்கு குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டு வரும் பணி வரும் செப்டம்பர் மாதத்திற்குள் முடிக்கப்பட்டு, அக்டோபர் முதல் குடிநீர் சப்ளை செய்ய நகராட்சி திட்டமிட்டு அதற்கேற்ப உள்கட்டமைப்புகளை உருவாக்கி உள்ளது.