திமுகவுக்கு வெற்றிமுகம்

திமுகவுக்கு வெற்றிமுகம்

2 mins read

வேலூர்: வேலூர் நாடாளுமன்றத் தொகுதிக்கு நடந்த தேர்தல் வாக்களிப்பில் மக்கள் யாருக்கு அதிகம் வாக்களித்துள்ளனர்? வேட்பாளர்களில் யாருக்கு வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது என்பது குறித்து தந்தி தொலைக்காட்சி கருத்துக்கணிப்பை நடத்தி அதன் முடிவுகளை வெளியிட்டுள்ளது.

ேவலூரில் கடந்த திங்களன்று நடந்த மக்களவைத் தேர்தலுக்கான வாக்களிப்பைத் தொடர்ந்து அளித்த பேட்டியில் ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் வித்தியாசமின்றி திமுக கட்சிக்கு வாக்களித்து இருப்பதாகவும் திமுக வெற்றிபெறும் என்றும் மக்கள் உறுதியாகக் கூறினர்.

யாருக்கு வாக்களித்தீர்கள், யார் வெற்றி பெறுவார்கள் என நினைக்கிறீர்கள் என்று வேலூர் தொகுதி மக்களிடம் செய்தியாளர்கள் கேட்டனர்.

திமுகவின் கதிர் ஆனந்த் 46-52% வாக்குகளைப் பெற்று வெற்றிபெறுவார் என்றும் அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி. சண்முகம் 41-47% வாக்குகளைப் பெறுவார் என்றும் மக்கள் தெரிவித்தனர்.

அத்துடன் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்டுள்ள தீபலட்சுமி 4-7 % வாக்குகளைப் பெறுவார் எனவும் கூறினர்.

ஏப்ரலில் நடைபெற்ற நாடாளு மன்றத் தேர்தலில் தமிழகத்தில் 38 தொகுதிகளில் 37 தொகுதிகளைத் திமுக கூட்டணியே வென்றது.

இந்நிலையில் இந்த வேலூர் தேர்தலிலும் திமுகவே வெற்றிபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளதால் திமுகவினர் உற்சாகம் அடைந்துள்ளனர்.

தேர்தலில் திமுக, அதிமுக, நாம் தமிழர் ஆகிய கட்சிகளின் வேட்பாளர்கள் உள்பட 28 பேர் களத்தில் இருந்தனர். இத்தேர்தலில் 72% வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இந்த விழுக்காட்டில் சற்று மாற்றம் இருக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலில் பதிவான வாக்குகள் ஆகஸ்ட் 9 அன்று எண்ணப்பட உள்ளன.

தேர்தலுக்கு முந்திய கருத்துக்கணிப்பில் திமுகவுக்கு 48-52% வாக்குகளும் அதிமுகவுக்கு 44-50% வாக்குகளும் மற்றவர்களுக்கு 2-5% வாக்குகளும் கிடைக்கும் எனக் கூறப்பட்டிருந்த நிலையில் பிந்திய கருத்துக்கணிப்பில் அது குறைந்துள்ளது.

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வேலூர் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. மத்தியில் பாஜக அரசு அமைந்தபிறகு நடைபெறும் தேர்தல் என்பதால், மக்களின் முடிவை அறிந்துகொள்ள ஒட்டுமொத்த தமிழகமே காத்திருக்கிறது.